சிறப்புக் கட்டுரை- காற்றில் கரைந்துவிடுமா அ.தி.மு.க?

கடந்த டிசம்பர்  5-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவதற்கு முன்பு கடைசியாக கலந்து கொண்ட சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக உறுப்பினர்களுக்கும், திமுக தலைவர் கருணாநிதிக்கும் பதிலளித்துப்பேசிய ஜெயலலிதா “ அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது. எனக்குப் பின்னரும் நூறு ஆண்டுகளுக்கு அதிமுக இருக்கும்” என்று பேசினார். ஆனால்  அவர் மறைந்து மூன்றே மாதத்தில் அ.தி.மு.க உடைந்து இப்போதுகட்சி சின்னமும் உடைந்திருக்கிறது. அ.தி.மு.க ஆர்.கே. நகர் தேர்தலோடு கரைந்து விடுமோ என்கிற விவாதங்கள்தான் சமூக வலைத்தளங்களில் நடந்து வருகிறது.

இரட்டை இலை முடக்கப்படுவது முதன் முறையல்ல, இரண்டாம் முறையாக முடக்கப்பட்டிருக்கிறது இரட்டை இலைச் சின்னம். ஒரு அரசியல் கட்சிக்கு தலைவர்கள் எந்த அளவு முக்கியமோ அந்தளவு முக்கியம்கட்சியின் சின்னம். கட்சித் தலைவர்கள் தொகுதிக்கு வராவிட்டாலும் கட்சியின் சின்னம் அதை ஈடுகட்டி விடும். தமிழகத்தில் உதய சூரியன், இரட்டை இலை என்ற இரண்டு சின்னங்களை தாண்டி இதுவரை எந்தச்சின்னமும் மக்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமானது இல்லை. உதயசூரியனை விட சின்னத்தைக் காட்டி ஜெயித்ததில் இரட்டை இலைக்கே அதிக பங்குண்டு. எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியிருந்த போது இதே இரட்டைஇலையைக் காட்டியே அவர் வென்று காட்டினார். உடல் நலம் குன்றி ஜெயலலிதா 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நடந்த  தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் வெல்ல அவரது கையெழுத்தும் இரட்டை இலைச் சின்னமுமே போதுமானதாக இருந்தது.

1972-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து எம்.ஜி.ஆர் அதிமுக என்று தனிக்கட்சியை தொடங்கினார். மக்களிடையே தனக்கு இருக்கும் செல்வாக்கை திமுக கட்சிக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.அச்சமயத்தில் 1973-ஆம் ஆண்டு திண்டுக்கல் தொகுதிக்கான லோக் சபா இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருந்த எம்.ஜி.ஆரை கட்சி நிர்வாகிகள்சமாதானப்படுத்தி தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைத்தனர். திண்டுக்கல் தொகுதியில் மாயத்தேவர் என்பவரை நிறுத்தினார். அப்போது அ.தி.மு.க கட்சிக்கு தேர்தல் ஆணையம் 16 சின்னங்களை ஒதுக்கியது. அதில் 7-வதாக இருந்தது இரட்டை இலை. மாயத்தேவர் இரட்டை இலையை தேர்ந்தெடுத்து எம்.ஜி.ஆரிடம் காட்டினார். அப்போது எம்.ஜி.ஆர் இத்தனை சின்னங்களில் ஏன் இரட்டை இலையை தேர்வு செய்தீர்கள்  என்று கேட்டார்.அப்போது மாயத்தேவர், ”தலைவரே இரண்டாம் உலகப்போரில் வெற்றி பெற்றதும் வின்ஸ்டன் சர்ச்சில் வெற்றியின் அடையாளமாக தனது இரண்டு விரலை காட்டினார். அது போல் நீங்கள் இரண்டு விரலை மட்டும்காட்டுங்கள் போதும் சின்னத்தை புரிந்து கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள் நாம் வென்றுவிடலாம்” என்றார். இப்படி உருவானதுதான் இரட்டை இலை சின்னம்.  அதனைத் தொடர்ந்து 1977-ஆம் ஆண்டு சட்டசபைதேர்தலின் போது இரட்டை இலை சின்னத்தை வடிவமைக்கும் பொறுப்பை நடிகர் பாண்டுவிடம் அளித்தார் எம்.ஜி.ஆர். பின்னர் இரட்டை இலை சின்னம் தமிழகத்தில் அசைக்க முடியாத சக்தியாக உருவானது அனைவரும்அறிந்த கதை.

1987-ஆம் ஆண்டு  எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ஆர்.எம்.வீரப்பனின் ஆதரவுடன் முதல்வராக 13 நாட்கள் இருந்தார். அதை கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளாமல் கட்சியை விட்டு விலகினார். அதனையடுத்து ஜானகி பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால் ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. இதனையடுத்து  எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிதலைமையில் ஒரு அணியாகவும், எம்.ஜி.ஆரை அரசியல் குருவாகவும் ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா  தலைமையில் ஒரு அணியாகவும் அ.தி.மு.க  இரண்டாக உடைந்தது(ஜெ, ஜா அணிகள்). அப்போது இரட்டை இலைசின்னம் முடக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெ அணிக்கு சேவல் சின்னமும், ஜா அணிக்கு இரட்டை புறா சின்னமும் ஒதுக்கப்பட்டது. தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஜெ அணி 27 எம்.எல்.ஏ.,க்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபையில் நுழைந்தது. (அதில் தற்போது தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர்). பின்னர்ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டு ஜானகி அவருடன் இணைந்ததும் இரட்டை இலை சின்னம் மீண்டும் 1991-ஆம் ஆண்டு மீட்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாகஉருவெடுத்தார்.

எனக்குப் பின்னரும் கட்சி நூறு ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்று சொன்ன ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-ல் காலமானார். அவர் இறப்பை அறிவிப்பதற்கு முன்பே முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பன்னீர்செல்வம்.எனக்கு கட்சியில் எந்த பதவியும் வேண்டாம் எனக்கு அக்காவே போதும் என்று கூறி வந்த சசிகலா ஒரு பெரும் இயக்கத்தின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார். அதன்பின் நடந்த சிலகுழப்பங்களாலும், அதிகார ஆசையினாலும் ஜெயலலிதா ஒன்றிணைத்த அதிமுக எனும் பெரும் இயக்கம் இரண்டு அணிகளாக இரண்டாவது முறையாக பிரிந்திருக்கிறது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும்பன்னீர் செல்வம் அணி, சசிகலா அணி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும்  என்று முறையிட்டு வந்தனர். ஆனால் தேர்தல் ஆணையமோ யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இரட்டை இலைசின்னத்தை முடக்கியதோடு மட்டுமில்லாமல் அ.தி.மு.க என்ற பெயரையே முடக்கியுள்ளது. எம்.ஜி.ஆர் எனும் பெரும் அரசியல் தலைவரால் கண்டெடுக்கப்பட்ட அ.தி.மு.க என்ற பெயரே முடக்கப்பட்டுள்ளது. ஒருகட்சியின் பெயர் முடக்கப்படுவது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல்முறை. ஜெயலலிதா 100 வருடங்களுக்கு நிலைத்திருக்கும் என்று கூறிய அ.தி.மு.க அவர் இறந்த 3 மாதங்களிலேயே இறந்திருக்கிறது.அ.தி.மு.க கட்சியை எம்.ஜி.ஆர் உருவாக்கி தி.மு.க-வை எதிர்த்து நின்றாலும் அவரது மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க கட்சியை ஒரு வலுவான கட்சியாகவும், கட்டுப்பாட்டான கட்சியாகவும் வளர்த்தெடுத்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை ஜெயலலிதா மீட்டு தி.மு.க-வுக்கு எதிரான பெரும் சக்தியாக உருவானது போல் தற்போதுள்ள சசிகலாவோ, பன்னீர் செல்வமோ, டி.டி.வி தினகரனோ நிச்சயம் ஆக முடியாது என்பதே உண்மை. ஆர்.கே நகர் இடைத் தேர்தல் முடிந்த பிறகு கட்சியின் சின்னமும், பெயரும் மீண்டும் கிடைக்குமா இல்லை அ.தி.மு.க என்ற பெயரும், இரட்டை இலை சின்னமும் அரசியல் வரலாற்றிலிருந்து கரைந்து போகுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

 

-விக்ரம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*