தீபாவுக்கு 3 கோடி சொத்து!

ஜெயலலிதா மறைவையடுத்து அவரது தொகுதியான ஆர்.கே.நகருக்கு வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலில் திமுக, சசிகலா அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி, பாஜக, ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா என பல முனை போட்டி நிலவுகிறது. அனைத்து வேட்பாளர்களும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் ஆணையம் சசிகலா மற்றும் பன்னீர் செல்வம் அணியினர் இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதித்ததையடுத்து சசிகலா அணி தொப்பி சின்னம் மற்றும் அஇஅதிமுக அம்மா கட்சி என்ற பெயரிலும், பன்னீர் செல்வம் அணி இரட்டை மின்கம்பம் சின்னம், மற்றும் அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி என்ற பெயரிலும் போட்டியிடுகின்றனர். ஆர்,கே.நகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வருமாறு:-

டி.டி.வி தினகரன்(அஇஅதிமுக அம்மா கட்சி)

தொப்பி சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனக்கு 11 லட்சத்து 45 ஆயிரம் அளவுக்கு அசையும் சொத்துக்களும், 57 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மனைவி பெயரில் 9.59 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவர் சமர்ப்பித்த சொத்து கணக்கில் அடையாறில் அமைந்திருக்கும் அவரது வீட்டை தவிர அனைத்து அசையா சொத்துகளும் அவரது மனைவியின் பெயரில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வீடு அமைந்திருக்கும் நிலம் மொத்தம் 8726 சதுர அடிகள் வீடு கட்டப்பட்டிருக்கும் அளவு 7500 சதுர அடி என்றும் வீட்டின் மதிப்பு 1.14 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஃபெரா உள்ளிட்ட 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என கூறியுள்ளார். மேலும் தனது கல்வி தகுதியாக உயர் நிலை கல்வியை மன்னார்குடியில் முடித்ததாகவும் மற்றும் இளங்கலை கட்டிடவியல் படிப்பை பாதியில் விட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  முன்னாள் மக்களவை மற்றும் ராஜ்ய சபா எம்.பியாக இருந்த டி.டி.வி தினகரன் தனது தொழில் விவசாயம் என குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் அதிமுக தொண்டர் ஜோசப் என்பவர் டி.டி.வி தினகரன் மீது ஃபெரா வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் 28 கோடி ரூபாய் அபராதம் செலுத்துகிறார் அதனால் அவர் வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தேர்தல் ஆணையத்திடம் ஃபெரா வழக்கை சுட்டிகாட்டி தினகரன் வேட்பு மனுவை ஏற்க கூடாது என்று மனு அளித்திருப்பதால் தினகரனின் வேட்பு மனுவை ஏற்பதில் இழுபறி நிலவி வருகிறது.

மதுசூதனன்(அஇஅதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி)

மதுசூதனன் தனது பிரமாணப் பத்திரத்தில் 18 லட்சத்து 89 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தனது மனைவி பெயரில், 51 லட்சத்து 72 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், 3 கோடியே 81 லட்சம் மதிப்பிலான சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தன்மீது எந்த வழக்கும் இல்லை என குறிப்பிட்டுள்ளார். தனது கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி என்று தெரிவித்துள்ளார்.

தீபா(சுயேட்சை)

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தனக்கு ரு.1 கோடி அளவிற்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், 2 கோடி அளவிற்கு அசையாத சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கணவரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. அவர் தனது கல்வி தகுதியாக மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் பி.ஏ மற்றும் காமராஜ் யுனிவர்சிட்டியில் எம்.ஏ மற்றும் சர்வதேச ஊடகவியல் கார்டிஃப் யுனிவர்சிட்டியில் படித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மருது கணேஷ்(திமுக)

தனது சொத்து மதிப்பு 12 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். அசையும் சொத்து மதிப்பு ரூ.2,79,531 எனவும், அசையா சொத்து மதிப்பு 10 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  தனது கல்வி தகுதி இளங்கலை வணிகவியல் மற்றும் வக்கீல் துறையில் எல்.எல்.பி பட்டம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மருது கணேஷ் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*