ஆர்.கே நகர் : வெற்றிக்காற்று திமுக பக்கம்?

ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவர் வென்ற தொகுதியான ஆர்.கே நகருக்கு வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி இடைத் தேர்தல்நடைபெறவிருக்கிறது. ஜெயலலிதாவுக்குப் பின்னர் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக ஆனதும், தினகரன் துணைப்பொதுச்செயலாளரான பின்னர் அவர்கள் சந்திக்கும் முதல் தேர்தல். இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெல்லும் எனும் நிலையில் ஆர்.கே.நகரில் தினகரன் வெல்வாரா என்பதுதான் இப்போதைய கேள்விக்குறி?
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டி.டி.வி தினகரன், அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சி சார்பில்மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன், தீபா பேரவை சார்பில் தீபாஎன பலமுனை போட்டி நிலவுகிறதுமொத்தம் 62 வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும் டி.டி.விதினகரனுக்கும், திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கும்தான் நேரடி போட்டி.

ஆர்.கே நகருக்கு இது இரண்டாவது இடைத் தேர்தல்.சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறைக்குஜெயலலிதா சென்றதும் அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது. நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு அவரை சிறைக்கு அனுப்ப,குமாரசாமி தீர்ப்பு அவரை விடுதலை செய்ய, விடுதலை ஆன ஜெயலலிதா மீண்டும் எம்.எல்.ஏ பதவியேற்க வசதியாக ஆர்.கேநகர் எம்.எல்.ஏ வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டார். திமுக தேர்தலை புறக்கணிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா 1,60,432 வாக்குகள் பெற்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் 9,710 வாக்குகள் பெற்றார்.ஜெயலலிதா 1,50,722 வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றார். பின்னர் 2016-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றதமிழக சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா 97,218 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துபோட்டியிட்ட திமுகவை சேர்ந்த சிம்லா முத்துச்சோழன் 57,673 வாக்குகள் பெற்றார். ஜெயலலிதா சிம்லா முத்துச்சோழனை விட39,537 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆர்.கே நகரில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 62,721ஆகும். இதில் 1 லட்சத்து 28,305 ஆண்களும், 1 லட்சத்து 34,307 பெண்களும்,109 பிற வாக்காளர்களும் உள்ளனர். ஆண்டிப்பட்டிதொகுதி போலவே ஆர்.கே நகர் தொகுதி ஏழைகளும் தொழிலாளர்களும் நிறைந்த தொகுதி. இந்நிலையில் ஆர்.கே நகருக்கு இரண்டாவது முறையாக இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுக என்ற பெயர், இரட்டை இலை சின்னம் பறிபோன நிலையில் தொப்பி சின்னத்தில்போட்டியிடும் சசிகலாவின் உறவினரான டி.டி.வி தினகரன் 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்றுகூறியிருக்கிறார். ஆனால் தொகுதியில் அவர் எதிர்பார்த்த அளவு அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொகுதி மக்கள் மனதை வெல்வது வெற்றிக்கு முக்கியம் என்றாலும் முதலில் அவர் கட்சியினரின் மனதை வெல்லவேண்டும். காரணம் தினகரன் தரப்பு அதிமுகவினர் தொகுதிக்குச் செல்லும் போது ஆங்காங்கே சில எதிர்ப்புகள் பதிவாகின்றன. அது பொதுமக்கள் காட்டும் எதிர்ப்பு அல்ல அது அதிமுகவினரால் தூண்டி விடப்படும் எதிர்ப்பு. பன்னீர் அணியைப் பொறுத்தவரை அதன் மண்ணின் மைந்தர் என்ற கோஷத்தோடு மதுசூதனனை களமிறக்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கே தெரிகிறது ஆர்.கே. நகரில் வெல்லமுடியாது என்று. ஆனால் அவர்கள் வீழ்த்த நினைப்பது தினகரனை. அதற்காக கடுமையாக வேலை செய்கிறார்கள். வெற்றிபெறுவதை விட தினகரனை வீழ்த்துவதுதான் பன்னீர் அணியின் ஆர்.கே. நகர் அஜெண்டாவாக இருக்கிறது.அதிமுக பிளவுபட்டுகட்சியின் பெயரும், சின்னமும் பறிபோன நிலையில் தினகரனோ, மதுசூதனனோ ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவதற்கானசாத்தியங்கள் மிக குறைவே.

ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் மக்கள் மத்தியில் திமுகவின் உதய சூரியன்,அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் அடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் ஆகிய இரண்டு சின்னங்கள்தான் பிரபலமானதாகவும், மக்களுக்கு பழக்கப்பட்டவைகளாகவும் இருக்கின்றன. மேலும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் மருதுகணேஷ் ஆர்.கே நகர் தொகுதியை சேர்ந்தவர். மருதுகணேஷுக்கு தொகுதியிலும், மக்கள் மத்தியிலும் பெருமளவில் அதிருப்தி இல்லை.முக்கியமாக திமுக கட்சிக்குள்ளும் எதிர்ப்பு இல்லை. பல முனை போட்டி நிலவிவரும் நிலையில் கட்சியின் சின்னம், பெயர் ஆகியவைகளை பறிகொடுத்தும் மக்கள் மத்தியில் அதிகளவில் அதிருப்தியை பெற்றிருக்கும் தினகரன் நிச்சயம் வெற்றி பெறமுடியாது என்றே கருதப்படுகிறது. கட்சியின் பெயர், உதய சூரியன் சின்னம், எதிர்தரப்பு மீது இருக்கும் மக்களின் அதிருப்தி ஆகியவைகளை உபயோகப்படுத்தி கொண்டு ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் திமுகவை சேர்ந்த மருதுகணேஷ் வெல்வதற்கே அதிகளவில் வாய்ப்பு இருக்கிறது. ஆர்.கே நகரில் 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜெயலலிதா போல் வெற்றி பெற யாருக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் இந்த ஆர்.கே நகர் இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றி என்பது அக்கட்சிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*