அனைத்து விவசாயக் கடன்களும் ரத்து செய்யப்பட வேண்டும்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று கூட்டுறவு வழங்கிகள் வழங்கிய அனைத்து விவசாயக் கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள கடன்களும் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஹரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்களும் டெல்லிக்கு சென்று விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.மேலும், டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் தமிழ் மாணவர்கள் ஒன்றாக திரண்டு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்டனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து பேட்டியளித்த அய்யாக்கணு
“ கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகளும் தாங்கள் வெற்றி பெற்றால் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தன.

அ.தி.மு.க. வெற்றி பெற்றதும் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகள் மீது கொண்ட கருணையால் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தார்.

நான் 20 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரன். என்னுடைய 4 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்வதற்கு கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கியிருந்தேன். அதன் அடிப்படையில் எனக்கு கடன் தள்ளுபடி செய்வதாக கடிதம் கிடைத்தது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் நான் ரிட் மனு தாக்கல் செய்தேன்.

மாபெரும் வெற்றி
வெள்ளம், வறட்சி ஆகியவற்றில் சிறு விவசாயி, பெரு விவசாயி இருவரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே விவசாயிகள் அனைவருக்கும் சமமாக கூட்டுறவு வங்கிகளில் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தேன்.

அந்த வழக்கின் மீது சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை நேற்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 20 லட்சம் விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன்பெற்றிருந்தார்கள்.

அவர்களில் அரசு அறிவிப்பினால் ஏற்கனவே 16 லட்சம் பேருக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தற்போது கோர்ட்டு தீர்ப்பினால் மீதமுள்ள 4 லட்சம் விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். இதனை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

போராட்டம் தொடரும்
இதே போல மத்திய அரசும் தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து எங்களுக்கு நியாயம் வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

தேசிய வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வணிக வங்கிகளில் சுமார் 6 அல்லது 7 லட்சம் விவசாயிகள் பயிர்க்கடன்கள் பெற்றுள்ளார்கள். அந்த கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் எங்களுக்கு ஒரு நியாயம் கிடைத்துள்ளது. இங்கும் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அந்த நியாயம் கிடைக்கும் வரை நாங்கள் இங்கு இருப்போம். எங்களது போராட்டம் தொடரும். தேசிய வங்கிகளில் எங்கள் கடன்கள் ரத்து செய்யப்பட்ட பிறகுதான் நாங்கள் தமிழகம் செல்வோம்.இவ்வாறு போராட்டக்குழுத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*