ஜெ 100 கோடி அபராதம்:கர்நாடக மனு தள்ளுபடி!

சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் நூறு கோடி அபராதம் விதித்தது. அவர் மறைந்து விட்ட காரணத்தால் அவரை   சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்தும் விடுத்தது. ஆனால் இந்த நூறு கோடியை வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கை இன்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால் அவரை வழக்கிலிருந்து விடுவித்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை தண்டனை அளித்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. மேலும் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ10 கோடி அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பாக கர்நாடகா அரசு கடந்த மார்ச் மாதம் 21-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அம்மனுவில் ஒருவர் இறந்துவிட்ட காரணத்தால், அவர் மீதுள்ள குற்றச்சாட்டு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூற முடியாது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகுதான் ஜெயலலிதா இறந்தார். சசிகலா, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, 2016-ஆம் ஆண்டு ஜீன் மாதம் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5-ஆம் தேதிதான். அதனால், வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, ஒருவர் இறந்துவிட்டால், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் முடிவுக்கு வந்த்தாகக் கூற முடியாது. அதனால், எப்போது உச்சநீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்ததோ அப்போது ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை, அவரது சொத்துக்களை விற்று பறிமுதல் செய்ய வேண்டும் என கர்நாடக அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்து கொண்டது. சுமார் ஒரு மணி நேரம் நீதிபதிகள் அமிர்தவராய் மற்றும் பினாகி சந்திர கோஷ் ஆகியோர் இந்த மனு குறித்து ஆலோசனை மேற்கொண்டனர் அதனையடுத்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*