தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!

உள்ளாட்சித் தேர்தலை நடத்த காலதாமதம் செய்யும் மாநில தேர்தல் ஆணையம் மீது திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆண்டு அக்டோபரில் 2 கட்டங்களாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த தேர்தலில் பழங்குடி இனத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனக் கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதித்தது. மேலும், புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 30-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் நூட்டி ராம்மோகன் ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ‘‘வரும் மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என காலக்கெடு விதித்து உத்தரவிட்டனர்.
இதற்கிடையே உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் புதிய பிரதிநிதிகள் பதவியேற்க வேண்டும் என பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் உள்ளது. அதன்படி, ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி பிரதிநிதிகள் பொறுப்பேற்க வேண்டும் என மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பாடம் ஏ.நாராயணன், தனியாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாகவும் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி (பொறுப்பு) குலுவாடி ரமேஷ், நீதிபதி ஆர்எம்டி டீக்காராமன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பதில் மனுவில், வாக்காளர்பட்டியல் பணிகள் நடந்து வருகின்றன. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது சிரமம். எனவே, தேர்தலை நடத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என கோரப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பதில் மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மீண்டும் மீண்டும் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது கேலிக் கூத்தாகவும், நீதிமன்ற நேரத்தை வீணடிப்பதாகவும் உள்ளது. மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துக்கொண்டே இருக்க முடியாது. ஏற்கெனவே மே 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தலை நடத்தி முடிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என எச்சரித்தனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் இன்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக முறையீடு செய்தார். வழக்கு தொடர நீதிபதிகள் சுப்பிரமணியம் நூட்டி ரமமோகன் ராவ் அமர்வு அனுமதி அளித்துள்ளார். நீதிபதி அனுமதி அளித்ததை அடுத்து ஆர்.எஸ் பாரதி தரப்பு வழக்கறிஞர் வில்சன் மனு தாக்கல் செய்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*