ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்கு: மோதல் வெடிக்கும்!

ஜெயலலிதா எனும் அரசியல் பிம்பத்துக்கு சசிகலாவும், பன்னீர்செல்வமும், தீபாவும் உரிமை கோருகிறார்கள். ஆனால் அவருக்கு நீதிமன்றம் விதித்த நூறு கோடி ரூபாய் அபராதத்தை எவர் ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இனி அவருக்குரிய சொத்துக்கள் யார் யார் பங்கிட்டுக் கொள்வது என்பதில் போட்டி உருவாகும் நிலை உருவாகியுள்ளது.

வருமானத்திற்கு அதிகமான சொத்துச் சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தண்டனைக்குள்ளான முதல் குற்றவாளியான முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்ட காரணத்தால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்த நீதிமன்றம் அபராதத்தை வசூலிக்க வேண்டிய தேவையில்லை என்றும் அறிவித்து விட்டது.
திரும்ப ஒப்படைக்கப்படும் பொருட்கள்
சொத்துக்குவிப்பு வழக்கு ஜெயலலிதா மீது தாக்கல் ஆன போது அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 10,500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள், மூன்றரை கோடி அளவுள்ள தங்க நகைகள், 1 கோடி வைர நகைகள், இன்னும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் என அனைத்து பொருட்களும் கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ளது. அபராதத்தை வசூலிக்க தேவையில்லை என்று நீதிமன்றம் சொல்லி விட்டதால் இந்த பொருட்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
யாரிடம் ஒப்படைப்பார்கள்?
ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட போது அவர் மீது போர்த்திய தேசியக் கொடியை உயரதிகாரிகள் சசிகலா கையில் கொடுத்தார்கள். இப்போது அவர் சிறையில் இருக்கும் நிலையில். இந்த பொருட்களை அரசு யாரிடம் ஒப்படைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த பொருட்களைப் பெற நீதிமன்றத்தில் மனு செய்தே பெற முடியும்.அது போல போயஸ் கார்டன், கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், உள்ளிட்ட அசையும் அசையாச் சொத்துக்கள் பல நூறு கோடி அளவுக்கு உள்ளது.
போயஸ் இல்லத்தில் இப்போது சசிகலாவிடமே உள்ள நிலையில் இந்தச் சொத்துக்களுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா, தீபக் இருவருமே உரிமை கோருவார்கள் எனத் தெரிகிறது.
நேரடியான வாரிசுகள் எதுவும் அவருக்கு இல்லாத நிலையில் அவரது ரத்த சொந்தங்களான தீபாவும், தீபக்கும் சசிகலாவிடம் இருந்து இச்சொத்துக்களை எப்படி மீட்கப் போகிறார்கள் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜெயலலிதா சொத்து மதிப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் மொத்தம் ரூ.113 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் அசையும் சொத்துக்கள் ரூ. 41கோடியே 64 லட்சம் ஆகும். அசையா சொத்துக்கள் ரூ. 72 கோடியே 9 லட்சம் ஆகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*