விமானங்களை முடக்குவோம் சிவசேனா அறிவிப்பு!

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் சமீபத்தில் ஏர் இந்தியா மேலாளரின் கன்னத்தில் செருப்பால் 25 முறை செருப்பால் அடித்தார். டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த மோசமான செயலில் ஈடுபட்ட கெய்க்வாட் எம்.பி.க்கு கடும் கண்டனம் தெரிவித்த ‘இந்தியன் ஏர்லைன்ஸ் கூட்டமைப்பு’ அவர் விமானங்களில் பயணம் செய்ய தடை விதித்தது.இதனையடுத்து பல முறை டிக்கெட் எடுக்க அவர் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. மத்திய அரசும் ஏற்கனவே ஏர் இந்தியாவின் நடவடிக்கையை ஆதரித்தது.

இந்நிலையில் இன்று பாராளுமன்றத்தில் சிவசேனா எம்.பி.க்கள் இப்பிரச்சனையை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். சிவசேனா எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் பேசும்போது அவர்களில் சிலர், “இதுபோன்ற ஒரு தடை நடவடிக்கையானது நீடித்தால், நாங்கள் மும்பையில் இருந்து ஒரு விமானத்தை கூட புறப்பட விடமாட்டோம்,” என கூறியதாக செய்தி வெளியானது.
ஏப்ரல் 10-ம் தேதிக்குள் ஏர் இந்தியா பிரச்சினைக்கு தீர்வு கண்டு, கெய்க்வாட் மீதான தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிவசேனாவும் கெடு விதித்துள்ளது.எனவே, சிவசேனா கட்சியினர் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு விமான போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தலாம் என்றும் தகவல் பரவியது. ஏர் இந்தியா ஊழியர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் இருந்தது.இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் மும்பை மற்றும் புனே விமான நிலையங்களில் உள்ள தனது பணியாளர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க உள்ளது.

மும்பை மற்றும் புனே விமான நிலையங்களில் உள்ள சில தொழிற்சங்கங்கள் சிவ சேனாவின் தொழிற்சங்கமான பாரதிய கம்கர் சங்கத்துடன் இணைந்திருப்பதால், ஏர் இந்தியா நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*