சிரியா விஷ வாயு தாக்குதல் : குடும்பத்தை இழந்தவரின் பரிதாப நிலை

சிரிய நாட்டில் உள்நாட்டு போர் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் கிளர்ச்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கான் ஷேக்கான் பகுதி மீது கடந்த 4-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ரசாயன வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரிய அரசுப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ரசாயன வெடிகுண்டுகள் வீசப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ரசாயனத் தாக்குதலுக்கு சிரிய அதிபர் பஷார் அல் ஆஷாத் காரணம் என அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள். ஆனால் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என சிரிய அரசு மறுத்துள்ளது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் 80 பேர் வரை பலியாகியுள்ளனர். இதில் 20 பெண்களும் 30 குழந்தைகளும் அடக்கம். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. விஷவாயுத் தாக்குதலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட மக்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துள்ளனர். இந்த தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய ஒவ்வொரு தகவலும் வெளிவருகிற போது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது.

இந்த தாக்குதலில் அப்தெல் ஹமீது அல்யூசுப் என்பவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகள், இரண்டு சகோதரர்கள், தந்தை, உறவினர்கள் என மொத்தம் 22 பேரை இழந்து நிலைகுலைந்து போயிருக்கிறார். இச்சம்பவம் கான் ஷேக்கான் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான இரட்டை குழந்தைகள் அல்யூசுப்புக்கு பிறந்து 9 மாதங்களே ஆகின்றன. தனது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகள் இழப்பு குறித்து அல்யூசுப் கூறுகையில், ”விமானத் தாக்குதல் நடந்த அன்று நான் எனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். அப்போது 5 நிமிடங்கள் கழித்து நாங்கள் விசித்திரமான ஒரு வாசனையை நுகர்ந்தோம். அப்போது மக்கள் மூச்சுத்திணறி கீழே விழுந்து கொண்டிருந்தனர். மூச்சுத்திணறலால் கீழே விழும் மக்களின் எண்ணிக்கை 60,70 என உயர்ந்து கொண்டே சென்றது. எனது மனைவியும் மகள்களும் என் கண்முன்னே மூச்சுத்திணறலால் இறந்து கிடந்தனர் எனது குழந்தைகள் இரட்டை குழந்தைகள் அவர்கள் பிறந்து 9 மாதங்களே ஆகின்றன” என்று கூறுகிறார் அழுது கொண்டே. இறந்து போன தனது இரண்டு குழந்தைகளான அயா மற்றும் அகமது ஆகிய இருவரையும் கையில் வைத்து கொண்டு அப்பாவுக்கு குட் பை சொல்லுங்கள் என்று தனது அல்யூசுப் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி காண்போர் மனதை கனக்க வைக்கிறது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடைபெறும் தாக்குதல் அனைத்தும் நிறுத்தப்பட்டு சிரியா நாட்டில் அமைதி திரும்ப வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் அங்கு தொடரக்கூடாது என்பதே சிரிய மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரின் எதிர்ப்பார்ப்பாகவும் இருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*