ஆர்.கே.நகரிலிருந்து வெளியேற வேண்டும் : தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் யார்? வெல்லப்போகிறார் என்று தமிழகமே எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைகிறது. எனவே திங்கட்கிழமை (ஏப்.10) மாலை 5 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டம், ஊர்வலம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அவற்றில் பங்கேற்கவோ கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: –

ஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு ஏப்ரல் 12-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.இந்நிலையில் நாளை (ஏப்ரல் 10-ஆம் தேதி) மாலை 5 மணி முதல் பிரச்சாரம் முடிவடைகிறது. இதையடுத்து தொகுதிக்கு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள், அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் அனைவரும் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். தேர்தல் தொடர்பான தகவல்களை திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை, முகநூல், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்கள் வாயிலாக பொது மக்களின் பார்வைக்குக் கொண்டு செல்லக்கூடாது. குறுந்தகவல், இணையதளம் உள்ளிட்ட அனைத்து மின்னணு தகவல் தொடர்புகளும் இதில் அடங்கும். மேலும் ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 5 மணி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்துவதற்கும், முடிவுகள் வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் ஏப்ரல் 12-ஆம் தேதி மாலை 6.30 மணி வரையில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*