மெட்ரோ ரயில் தோல்வித் திட்டமா?

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் அவ்வழியாக சென்ற காரும் அதை பின்தொடர்ந்து வந்த பேருந்தும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, எல்ஐசி, பாண்டி பஜார் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாக திடீர் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்ணா மேம்பாலம் அருகே சர்ச் பார்க் பள்ளிக்கு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் பள்ளம் ஏற்பட்டது. அப்போது அதிலிருந்து ரசாயன திரவங்கள் கொப்பளித்ததாகவும் கூறப்பட்டது அந்த பகுதியில் மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நடைபெற்று வருவதால் பள்ளம் உருவாகி இருக்கலாம் என்று அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இதனிடையே அண்ணா சதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கி 25 ஜி என்ற மாநகர பேருந்து ஒன்று அண்ணா சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது சர்ச் பார்க் பள்ளிக்கு அருகேயுள்ள பேருந்து நிலையத்தில் நின்று விட்டு பேருந்து புறப்பட்டது. பின்னால் வந்து கொண்டிருந்த கார் அந்த பேருந்தை முந்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் பெரிய அளவிலான பள்ளம் ஒன்று ஏற்பட்டு பேருந்து கவிழ்ந்தது. முந்த முயன்ற காரும் கவிழ்ந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ராயப்பேட்டை காவல்துறையினர் காயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து போக்குவரத்தை காவல்துறையினர் கடற்கரை சாலை வழியாக திருப்பி விட்டனர். இதனால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கிய. அந்த பேருந்தையும், காரையும் அகற்ற ராட்ச கிரேன் வரவழைக்கப்பட்டது. இந்த திடீர் பள்ளமானது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சின்னமலை மெட்ரோ ரயில் சுரங்க பணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏற்கெனவே இந்த இடத்தில் ஒரு சிறிய பள்ளம் ஏற்பட்டு 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்தினை பார்வையிட்ட நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், முழுதாக செப்பனிடப்பட்டு நாளை மாலைக்குள் போக்குவரத்துக்கு அண்ணா சாலை தயாராகிவிடும் எனவும், மெட்ரோ பணிகள் நடைபெறும் இடங்களில் அவ்வப்போது இப்படி பள்ளங்கள் உருவாகும் எனவும் வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக சென்னை அண்ணா சாலையின் கீழே தோண்டப்பட்ட பள்ளத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மழைக்காலத்தில் அந்த தண்ணீர் ஓடி வருகிறது. சில நேரங்களில் ஆங்காங்கே வெடிப்பு ஏற்படுகிறது. இப்போதோ ஒரு பேருந்தும் காரும் அந்த பள்ளத்தை உடைத்துக் கொண்டு பாய்ந்திருக்கிறது.  மெட்ரோ ரயில் பணிகளில் தரமற்ற பொருட்களைக் கொண்டு செய்யப்படும் பணிகளால் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதற்கு முன்பே இது போன்ற விபத்துகள் ஏற்படும் நிலையில் ரயில் இயக்கப்பட்டால் இப்படிப் பட்ட விபத்துகள் ஏற்பட்டால் அதன் விளைவுகள் என்ன மாதிரி இருக்கும் என்பதே பதட்டத்தோடு பொது மக்கள் கேட்கும் கேள்வி.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*