தேர்தல் ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்

ஜெயலலிதா மறைவையடுத்து அவர் வென்ற தொகுதியான ஆர்.கே.நகருக்கு வருகிற ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெறுகிறது என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்ததால் வருமான வரித்துறையினர் கடந்த 7-ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது உறுதியானதை தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகருக்கான இடைத்தேர்தலை ரத்து செய்து கடந்த 9-ஆம் தேதி இரவு அறிவித்தது.

இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்ததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேர்தல் ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் திங்கட்கிழமை கூறினார். இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம், திருமங்கலம் இடைத்தேர்தல்களில் தொடங்கி தற்போது ஆர்கே நகர் வரை வாக்குக்கு பணம் கொடுப்பதை அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் செய்து வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சை இரு தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அங்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவைத் தடுக்க சரியான செயல்முறைகளை வகுத்து செயல்படவில்லை.  டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் அணி வேட்பாளர் மற்றும் திமுகவினர் வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை ஆதாரங்களோடு தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வில்லை. பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தவும் இல்லை. இதில் தேர்தல் ஆணையம் தோல்வி அடைந்து விட்டது.  மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரோடு தொடர்புடைய பலரின் வீடுகளில் வருமான வரித்துறைச் சோதனை நடத்தி ஆதாரங்களை கைப்பற்றி உள்ளனர். அவற்றை வைத்துதான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே ஆதாரங்களைக்கொண்டு அமைச்சர் மற்றும் தொடர்புடையவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்கள் அடுத்தத் தேர்தல்களிலும் போட்டியிட முடியாதவாறு தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவர்கள் செய்யும் தவறுகளால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் கட்சியின் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. எனவே எங்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும். தேர்தல்களில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் செலவுகளை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை கொண்டு வரவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது. கிரானைட் முறைகேடு, தாதுமணல், ஆற்று மணல் திருட்டு போன்றவற்றால் சம்பாதிக்கப்படும் பணத்தின் ஒரு பகுதி இடைத்தேர்தல்களில் அரசியல் கட்சியினரால் வாக்குகளுக்கு பணம் கொடுக்கச் செலவழிக்கப்படுகிறது. இந்த முறைகேடுகளைத் தடுக்க தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்படவேண்டும். கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அளித்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தங்களது கொள்கைகளில் நம்பிக்கை இல்லாத கட்சிகள்தான் வாக்குக்கு பணம் கொடுக்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை இளைஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எனவே மக்களிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஜனநாயகத்தை வலியுறுத்தியும், வாக்குக்கு பணம் கொடுப்பதை மக்களிடம் அம்பலப்படுத்தவும் கட்சியின் சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தப்பட உள்ளது. அதில் தேர்தல் சீர்திருத்தம் பற்றியும் மக்களிடம் எடுத்துச்சொல்லப்படும் இவ்வாறு அவர் பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*