கேரள பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்: கேரள அரசு அறிவிப்பு!

கேரளாவில் உள்ள பள்ளிகளில் இனி 10-வது வகுப்பு வரை கட்டாயம் மலையாளம் கற்பிக்க வேண்டும் என கேரள அரசு  அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.
தாய் மொழிக்கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வு ஓரளவுக்கு உருவாகி வருகிறது. நாம் உலகில் எந்த மொழியை வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம்.ஆனால் நாம் கற்றுக் கொள்ளும் மொழி முழுமையாக அர்த்தச் செறிவுடன் பயன்பட தாய் மொழிக் கல்வி அவசியம். தாய் மொழியைக் கற்காமல் பிற மொழிகளைக் கற்கும் போது கற்றுக்கொள்ளும் மொழியை நம் வாழ்க்கைக்கு பயன்படுத்த முடியாது. காரணம் அது அரைகுறையான மொழிப் புலமையை கொண்டதாக மட்டுமே இருக்கும். இதுவெ மொழியியலாளர்கள் சொல்லும் கூற்று ஆகும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்திக்கு விடை கொடுத்து ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டதால் இந்தியாவிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாக உள்ளது.  இந்தியாவில் தரமான கல்வியை வழங்கும் மாநிலங்களில் தமிழகமே முதலிடம் வகிக்கிறது என்றாலும் தாய் மொழிக் கல்வியில் தமிழகம் பின் தங்கியே இருக்கிறது.  இதே பிரச்சனை கேரளத்திலும் இருந்து வந்த நிலையில்,
இன்று  கேரள மாநிலத்தில் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம்  என்று கேரள அரசு தெரிவித்துள்ளது. இதற்காக கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்திற்கு கேரள கவர்னர் சதாசிவம் இன்று ஒப்புதல் வழங்கினார். இந்த சட்டத்தை மீறும்  பள்ளிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்த சட்டத்தில் வழி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள சில பள்ளிகளில் மலையாளம் கற்றுத்தராதது தொடர்பாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 10 ஆம் வகுப்பு வரை மலையாளம் கற்பிக்கப்படுவதை கட்டாயமாக்கி அவசர சட்டம் கொண்டு வர கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.  இந்த சட்டத்தை மீறும் பள்ளிகளுக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும் எனவும் மலையாளம் பேசுவதற்கு எதிராக பிரச்சாரமோ, போர்டுகளோ பள்ளிகள் வைக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு அறிவித்துள்ளது போல தமிழக அரசும் அறிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*