அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய ஆளுநரிடம் திமுக-வினர் கோரிக்கை!

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக திமுக கட்சியினர் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மும்பையில் இன்று சந்தித்தனர். ஆர்கே.நகரில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் ஆளுநரிடம் மனு அளித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி வருமானவரித்துறையினர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி ஆகியோர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் அளித்ததற்கான ஆவணங்கள் சிக்கின. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்  தொடர்பான அறிக்கையை தமிழக தேர்தல் அலுவலர்களிடம் வருமான வரித்துறையினர் வழங்கினர். தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதையடுத்து, ஆர்கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம்  அறிவித்தது.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுகவின் முதன்மை செயலர் துரைமுருகன், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் மும்பையில் இன்று நேரில் சந்தித்தனர். அப்போது ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மனு அளித்தனர். மேலும் கடந்த ஒரு மாத காலமாக டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*