டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீஸ் தாக்குதல்!

தமிழகத்தில் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு மதுபானக்கடைகளை அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சாலையோரம் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. ஆனால் அந்த கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை அமைக்க தமிழக அரசு மாற்று இடம் தேடி வருகிறது. நெடுஞ்சாலைகளைத் தவிர்த்து கிராமப்புறங்களை ஒட்டிய இடங்களை டாஸ்மாக் நிர்வாகம் தேடி வரும் நிலையில் மதுக்கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில்,  திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடை அவசர அவசரமாக திறக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திய மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மக்கள் கலைந்து போக மறுக்க போலீசார் அவர்களை கண்டபடி தாக்கத் துவங்கினார்கள். பல பொதுமக்கள் ரத்தக்காயம் அடைந்தனர். பெண்கள் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டனர்.
பெண்களை போலீசார் ஓட ஓட துரத்தி துரத்தி அடித்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  போலீஸ் தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்தது, அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். கடை மூடப்படும் என அதிகாரிகளோ, எம்.எல்.ஏ.வோ எந்தஒரு உத்தரவாதத்தையும் தரவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*