பெண்ணை தாக்கிய ஏடிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்கப்படும் : தமிழக அரசு!

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் அய்யன் கோவில் செல்லும் வழியில் தமிழக அரசு புதிதாக மதுபானக்கடை ஒன்றை நேற்று தொடங்கியது. இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். அப்போது ஈஸ்வரி என்ற 45 வயது பெண்ணின் கன்னத்தில் திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பலமாக அறைந்தார். பாண்டியராஜன் அறைந்ததில் அந்த பெண் நிலைகுலைந்தார்.

காவல்துறையினர் தாக்கும் காட்சி, சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதேபோல போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தடியடியில் சிவகணேஷ் என்பவரது மண்டை உடைந்தது. ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். தற்போது காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட பெண்ணுக்கு காது கேட்கும் திறன் இழந்துவிட்டதென மருத்துவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. காவல்துறையினரின் இச்செயலுக்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. தாக்குதல் நடத்திய காவல்துறையினரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். மேலும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மதுக்கடைக்கு எதிராக போராடிய பெண் கன்னத்தில் அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி திருப்பூர் சாமளாபுரத்தில் சர்ச்சைக்குரிய மதுக்கடை அமைக்கப்படாது என்று தெரிவித்தார். மேலும், ஏடிஎஸ்பி தாக்கியது பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது இன்று இரவுக்குள் ஏடிஎஸ்பி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து காவல்துறை ஆணையர் அறிக்கை வெளியிடுவார். தடியடியில் காயமடைந்தவர்களுக்கான மருத்துவ செலவை அரசே ஏற்கும் என கூறினார். மேலும் தடியடியின் போது பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறினார். இதனிடையே, திருப்பூர் சாமளாபுரம் மதுபானக்கடையை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*