பெண்ணை தாக்கிய பாண்டியராஜனுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

மதுக்கடைகளை மூடக்கோரி போராடிய பெண்கள் மீது, காவல்துறையினர் தடியடி நடத்தியது குறித்து இரண்டு வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று, திருப்பூர் ஏடிஎஸ்பி, தமிழக டிஜிபி மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், சாமளாபுரத்தில் அய்யன்கோவில் செல்லும் சாலையில், புதிதாக மதுபான கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அப்போது, திருப்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  பாண்டியராஜன், மறியலில் ஈடுபட்ட பெண்களை கைகளால் தாக்கினார்.  இதில், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி (45) என்ற பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதனால் நிலைகுலைந்த ஈஸ்வரிக்கு காது கேட்கும் திறன் இழந்துவிட்டது. காவல் துறையினர் நடத்திய தடியடியில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து, ஏடிஎஸ்பி பாண்டியராஜனை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அந்தப் பகுதி மக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், பாண்டியராஜன் பெண்களைத் தாக்கும் வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. தமிழகம் முழுவதும் பாண்டியராஜனுக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, ‘பெண்களைத் தாக்கியது குறித்து பாண்டியராஜன் விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக டிஜிபி, தலைமைச் செயலாளர் ஆகியோரிடமும் விளக்கம் கேட்டு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*