‘ஜெ’ உத்தரவை ஏற்று சித்திரை புத்தாண்டை கொண்டாடும் கலைஞர் டிவி!

திமுகவுக்குச் சொந்தமான கலைஞர் டிவியில் சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் துவங்கியுள்ளன. ஆனால் இது திமுக தலைவர் கருணாநிதி கொண்டு வந்த தை முதல் நாளே தமிழருக்கு புத்தாண்டு என்ற கொள்கைக்கு முரணானது என்பதோடு கருணாநிதி அறிவித்த நாளை ரத்து செய்து விட்டு சித்திரையை புத்தாண்டாக அறிவித்ததை கலைஞர் டிவி ஏற்றுக் கொண்டுள்ளதை வெளிப்படுத்துவதாக தெரிகிறது.
தை முதல் நாளே தமிழர்க்கு புத்தாண்டு என்பது உலகறிந்த உண்மை. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யும் உழவர் பண்டிகையான தை முதல் நாளை தமிழர்கள் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் அறுவடைக்காலம் முடிந்து பயிர்கள் காய்ந்து கொளுத்தும் கோடையில் மக்கள் வெந்து கொண்டிருக்கும் போது சித்திரையில் வரும் நாளை தமிழர் புத்தாண்டு என ஒரு கூட்டம் தமிழ் மக்கள் மீது திணித்தது. தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக தமிழறிஞர்களும், தமிழார்வலர்களும் ஏற்றுக் கொண்டிருக்கும் நிலையில். 2008-ஆம் ஆண்டு தை முதல் நாளை தமிழர்களின் புத்தாண்டாக அதிகாரபூர்வமாக சட்டமியற்றினார் கருணாநிதி.
இதை அப்போது தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் வரவேற்ற நிலையில் 2011-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த ஜெயலலிதா கருணாநிதியின் அந்த உத்தரவை ரத்து செய்தார். ரத்து செய்ததோடு சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டு என்று அரசாணையும் வெளியிட்டார்.
இது அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கிய நிலையில் கருணாநிதி முதுமையின் காரணமாக ஓய்வில் இருக்கிறார். அன்றாடம் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி தன் கைப்பட முரசொலியை திருத்தும் கருணாநிதியால் இப்போது வழக்கமான பணிகளில் ஈடுபட முடியவில்லை என்னும் நிலையில் அவரது கலைஞர் டிவியோ ஜெயலலிதா அறிவித்த சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளதன் அடையாளமாக சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப துவங்கியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*