தினகரன் நிச்சயம் ஆஜராக வேண்டும் : எழும்பூர் நீதிமன்றம்!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரன் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அப்லிங்க் சாதனங்களை இறக்குமதி செய்ததில் அந்நிய செலாவணி மோசடி செய்ததாக அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அவரது சகோதரி மகனும் அதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் மீது 1996-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நிலையில் கடந்த 10-ஆம் தேதி இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதற்கு நீதிபதி மலர்மதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் 13-ஆம் தேதி(நேற்று) கட்டாயம் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டார். அதன்படி எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நேற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் தினகரன் ஆஜராகவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி, வரும் 19, 20-ஆம் தேதிகளில் எழும்பூர் நீதிமன்றத்தில் தினகரன் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*