விவசாயிகள் தற்கொலையை அதிகாரபூர்வமாக அறிவித்தது தமிழக அரசு!

தமிழகத்தில் இதுவரை 82 விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தென் மாநிலங்களில் நிலவும் வறட்சியை அடுத்து கேரளம், கர்நாடக அரசுகள் தங்களை வறட்சி மாநிலமாக அறிவித்த நிலையில் தாமதமாக தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்த தமிழக அரசு இப்போது தாமதமாக விவசாயிகள் தற்கொலையை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த வருடம் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை பொய்த்ததன் விளைவாக தமிழகம் கடும் வறட்சிகுள்ளானது. இதனால் தமிழகத்தில் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். விவசாயம் பாதிப்புக்குள்ளானதால் விவசாயிகள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் பயிர்கள் கருகியதால் அதிர்ச்சியிலும், மாரடைப்பாலும் மரணமடைந்தனர். மரணமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று விவசாய சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. விவசாயிகள் தொடர்ந்து இறந்து வந்தது தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 9-ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி மாநில அணி தலைவர் புலியூர் நாகராஜன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரணம் குறித்தும், விவசாயிகளின் உயிரிழப்பு குறித்தும் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்டு மனு அளித்திருந்தார். இதற்கு தமிழக வேளாண்துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி பதிலளித்துள்ளார். அதில், ‘தமிழகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் 82 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு  3 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணத் தொகை 2,049 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகை, நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. குறுகிய கால கடன்களைத் திருப்பிச்செலுத்த, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு இருந்த போது 17 விவசாயிகளே தற்கொலை செய்து கொண்டனர் என்று அறிவித்தது.ஆனாலும் அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை நடைபெற வில்லை என்றே கூறி வந்தனர்.

வறட்சி காரணமாக இதுவரையில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக விவசாய சங்கங்கள் கூறிவரும் நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக அரசு வேண்டுமென்றே விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையை குறைத்து கணக்கிட்டுருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். மத்திய அரசுதான் தமிழக விவசாயிகளை கண்டுகொள்ளாமல் இருக்கும் நிலையில் தமிழக அரசும் இவ்வாறு நடந்து கொண்டிருப்பது வேதனையையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*