விவசாயிகள் போராட்டம்: தங்கர் பச்சான் முதல்வருக்கு கடிதம்!

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த பல நாட்களாக போராடி வரும் நிலையில் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக சென்னை கத்திப்பாரா சந்திப்புக்கு பூட்டு போட்டு போராடி கைதான இயக்குநர் கௌதமன் உள்ளிட்ட எழுவர் புழல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


இந்நிலையில், இயக்குநர் தங்கர்பச்சான் தமிழக முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் “ வணக்கம். விவசாயிகளின் வாழ்வாதாரங்கள் நாளுக்கு நாள் அழிந்து வரும் வேளையில் அவர்களின் குரல் வீதிக்கு வந்து பல மாதங்கள் கடந்து இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மாநில அரசு அதனுடைய அளவில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உதவியிருக்கிறது. அதன் மூலம் இலட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.
ஆனால் நடுவண் அரசு மூலம் தீர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகளை முன் வைத்து டெல்லியில் ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழிக விவசாயிகள் கடும் வெயிலிலும் மழையிலும் கிடந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நடுவண் அரசின் இப் பொறுப்பற்ற நிலையைக்கண்டு தமிழக மக்களும் இளைஞர்களும் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
ஏற்கனவே துயரத்திற்கு ஆளான விவசாயிகளின் உயிர்கள் இழந்து போக இனிவரும் காலத்தில் போராட்டம் முடிவுக்கு வராத நிலையில் மேலும் அவ் உயிர்களை இழந்து விடுவோமோ எனும் அச்சம் உருவாகியிருக்கிறது.
மண்ணைத் தொட்டு வளர்ந்த உழவனுக்குத் தான் இன்னொரு உழவனின் வலியும் வேதனையும் புரியும். தூங்கள் ஒரு உழவனின் மகன் என்பதால் தான் இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன். தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் நடுவண் அரசு இந்த பேராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுமோ எனும் உணர்வு தமிழகத்தை சேர்ந்த அனைவரையும் கவலைக்குள்ளாக்கியிருக்கிறது.
இந்த போராட்டத்தை உயிரிழப்பு வரை கொண்டு செல்லாமல் முடிவுக்கு கொண்டுவர தற்போது தாங்களால் மட்டுமே முடியும் என நம்புகிறேன் தாங்கள் முன்னிலையில் போராட்டக் குழுவினர் பிரதம மந்திரியை சந்தித்து ஓர் உடன்படிக்கை ஏற்பட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுகிறேன்.
இக் காரியத்தை நிறை வேற்றுவதற்கு தமிழக விவசாயிகளும் மக்களும் என்றும் உங்களுடன் துணை நிற்பார்கள். நான் ஒரு உழவனாக இருந்து இக்கோரிக்கையை தமிழக விவசாயிகளின் சார்பாக முன்வைக்கிறேன். “ என்று தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*