தொடர்கிறது நெடுவாசல் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, 5-வது நாளாக இன்றும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இத்திட்டத்தை, ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல் பகுதி மக்கள் தீவிரமான போராட்டத்தை நடத்தினர். மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என்று  மத்திய, மாநில அமைச்சர்கள் உறுதியளித்தனர். இதனை நம்பி மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். ஆனால்  மார்ச் 27-ஆம் தேதி நெடுவாசல் உட்பட நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல், அதைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் பெற்றுள்ள தனியார் நிறுவனம், அதற்கான பணிகளைத் தொடங்க முயல்வதாகக் கூறி, நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே அப்பகுதி இளைஞர்கள், பெண்கள் ஏப்.12-ஆம் தேதி மீண்டும் தங்களது போராட்டத்தைத் தொடங்கினர். 5-வது நாளான இன்றும் போராட்டம் நீடிக்கிறது. போராட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை  எழுப்பினர். இதில் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருக்கின்றனர். இனி மத்திய மாநில அமைச்சர்களின் உறுதி மொழியை நம்பக் கூடாது என்ற மனநிலையில் நெடுவாசல் மக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் தமிழக மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் நிலை உருவாகியிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*