தெலுங்கானாவில் இஸ்லாமியர்களுக்கு 12% இட ஒதுக்கீடு : பாஜக எதிர்ப்பு!

தெலுங்கானா மாநிலத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இந்த இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி  தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அதன்படி இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க சிறப்பு சட்டசபை கூட்டம்  இன்று நடைபெற்றது. அப்போது இஸ்லாமியர்களுக்கு 12% இட ஒதுக்கீடும், பழங்குடியின மக்களுக்கு 10% இட ஒதுக்கீடுக்கான சட்ட மசோதாவை முதல்வர் சந்திரசேகர ராவ் கொண்டு வந்தார். அப்போது சமூக பொருளாதார சூழ்நிலையினை கருத்தில் கொண்டு இந்த இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வருவதாகவும், இதனை மத்திய அரசு இட ஒதுக்கீட்டுக்கான அட்டவணையில் இணைத்து கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். தெலுங்கானாவில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகை 12.68% இருக்கிறது அதன்படி இந்த ஒதுக்கீடு உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தவறானது என்றும் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க தெலுங்கானா அரசு முடிவு செய்திருப்பது சட்டத்துக்கு எதிரானது என்றும் பாஜக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது, பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் 5 பேர் அவையின் மையப்பகுதிக்கு சென்று இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதனால் அவர்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார். பின்னர் பாஜக கட்சியின் எம்.எல்.ஏ., ஒருவர் கூறுகையில், தெலுங்கானா மாநில அரசு வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது. உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதாவிற்கு  கிடைத்த வெற்றியால் முதல்வர் சந்திர சேகர ராவ் பயத்தில் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார். மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோரும் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டசபையில் கொண்டு வரப்பட்ட இட ஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து சட்டசபைக்கு வெளியேயும் பாஜக கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தியும், கைது செய்தும் கலைத்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*