முதன் முதலாக நேபாளத்துடன் சீனா கூட்டு ராணுவ பயிற்சி: அதிர்ச்சியில் இந்தியா!

2016  ஆகஸ்ட் மாதம் நேபாள பிரதமராக பதவியேற்றார்  மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா.  நீண்ட காலமாக  நேபாளம் இந்தியாவின் ஒரு காலனித்துவ நாடு போல இருந்து வருகிறது. ஆனால் பிரசண்டா பதவியேற்ற பின்னர் சீனாவின் பக்கம் தன் ஆர்வத்தைக் காட்டினார். இது நீண்டகாலமாக நட்பு நாடாக இருக்கும் இந்தியாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இப்போது  நேபாளம் , சீனா இடையே முதன் முதலாக இராணுவ கூட்டுப் பயிற்சி நடைபெற இருக்கிறது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது. இந்த பயிற்சி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் துவங்கியது. இந்த பயிற்சிக்காக சீன மக்கள்  விடுதலை இராணுவத்தினர் தலைநகர் காத்மாண்டுவுக்கு வந்தனர்.  இதுவரை இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நேபாளம் சீனாவுடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த பயிற்சிக்கு  “ சகர்மாதா நட்பு-2017” என்று பெயரிட்டுள்ளது.
நேபாளம், மற்றும் சீனாவுக்கு இடையே உள்ள எவரெஸ்ட் சிகரமான சகர்மாதாவின் பெயரையே இந்த பயிற்சிக்கும் வைத்துள்ளது இரு நாடுகளும். சுமார் பத்து நாட்கள் நடைபெறப் போகும் இப்பயிற்சி தீவிரவாத தாக்குதல்களை தடுப்பது, இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை காப்பாது என்கிற அளவில் அமையும் என்கிறது  சீனாவும், நேபாளமும்.
தலாய்லாமா விவகாரத்தில் சீனாவின் எச்சரிக்கையையும் மீறி அருணாச்சலப்பிரதேசத்திற்குள் தலாய்லாமாவை அனுமதிக்கும் இந்தியாவுக்கு சீனா விடுக்கும் பகிரங்க எச்சரிக்கையாகவே இந்த இராணுவப் பயிற்சியை இந்திய ராணுவ அரசியல் நோக்கர்கள்  கருதுகிறார்கள்.
நேபாளம் தன் கைவிட்டுப் போவதை இந்தியா வேடிக்கை பார்க்கப் போகிறதா அல்லது ஆசியாவில் சீனாவின் கை ஓங்கி வருவதை இந்தியா கட்டுப்படுத்தப் போகிறதா?  என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*