வந்தார் திமுகவை திட்டினார்:மீண்டும் சிறை சென்றார் வைகோ!

தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட வைகோவுக்கு எழும்பூர் நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை வரும் 27-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ இன்றும் திமுகவை விமர்சனம் செய்தார்.

கடந்த 2009-ஆம் ஆண்டு ராணி சீதையம்மாள் அரங்கில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாகக் கூறி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வைகோ கோரிக்கை வைத்திருந்தார். இது குறித்து எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், வழக்கை விரைவாக நடத்தவில்லை என்றால், தன்னைக் கைது செய்ய அவர் கோரியிருந்தார். மேலும், ஜாமீனில் வெளிவர விருப்பமில்லை என்றும் அவர் கூறினார். இதனால், அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்றுடன், அவரது 15 நாள் காவல் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரது நீதிமன்றக் காவலை, வருகின்ற 27-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மீண்டும் சிறைக்கு செல்லும் முன் நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

விவசாயிகள் போராட்டத்தை, மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. மோடி, விவசாயிகளைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. மேகதாது விவகாரத்தில் மத்திய அரசு, கர்நாடக அரசுக்கு சாதகமாகவும், தமிழகத்துக்குப் பாதகமாகவும் செயல்படுகிறது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை, தமிழகத்துக்குள் கொண்டுவர விட மாட்டோம். மதுவுக்கு எதிராகப் போராடிய பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரியை ஏன் பணி நீக்கம் செய்யவில்லை. முல்லை பெரியாறு மற்றும் மீத்தேன் திட்டத்தில் திமுக கட்சி துரோகம் செய்துவிட்டது இவ்வாறு அவர் பேசினார்.

வைகோ திமுகவை குறை சொல்வதையே தனது குறிக்கோளாக வைத்திருக்கிறார். அரசியலில் எந்த விஷயம் யாரால் நடந்தாலும் அதற்கு மூலக் காரணம் திமுகதான் என்ற குற்றச்சாட்டினை தொடர்ந்து முன் வைத்து வருகிறார். வைகோவின் இச்செயல்பாடுகளுக்கு எதிராக வைகோவை திமுகவினரும் சரமாரியாக விமர்சனமும், கிண்டலும் செய்து வருகின்றனர். அவரை சமூக வலைதளங்களில் அதிகளவில் கேலி செய்து வருகின்றனர்.ஆனாலும் வைகோ திமுக தொடர்பான தனது நிலைபாட்டிலிருந்து மாறியதாக தெரியவில்லை. வைகோ செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் ஏதோ ஒரு வகையில் திமுகவை குறை சொல்லாமல் இருந்ததில்லை. அதுபோலவே இன்றைய செய்தியாளர் சந்திப்பிலும் வைகோ திமுகவை குறை கூறியிருக்கிறார். கடந்த 15 நாட்களாக சிறையில் இருந்ததால் திமுகவை விமர்சனம் செய்யமுடியவில்லை அதனால் இன்று திமுகவை விமர்சனம் செய்தே ஆக வேண்டும் என்ற நினைப்பில்தான் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தாரோ என்றே நினைக்க தோன்றுகிறது. திமுகவை திட்டிவிட்டு திரும்பவும் சிறைக்கு சென்றிருக்கிறார் வைகோ.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*