ஐய்யப்பனை தரிசித்த பருவப்பெண்கள்: சர்ச்சை!

பருவத்துக்கு வந்த பெண்கள்  ஐய்யப்பனை வழிபடக்கூடாது என்பது கேரள ஐய்யப்பன் கோவில் தேவஸம் போர்டின் கட்டுப்பாடு. மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஐய்யப்பன் கோவிலில் வழி பட்டால் கோவிலில் தீட்டு பட்டு விடும் என்கிற பிற்போக்கு எண்ணம்தான் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை ஐய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிக்காமல் வைத்திருக்க காரணம்.
இந்த மூடப்பழக்கத்திற்கு எதிராக உச்சநிதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில் பிடிவாதமாக இந்த கட்டுபாடுகளை தளர்த்த தேவசம் போர்ட் மறுத்து வரும் நிலையில் பருவ வயதுடைய இளம் பெண்கள் சிலர் அய்யப்பனை சென்று தரிசித்திருப்பது கேரளாவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
இந்நிலையில், நேற்று முதல் அய்யப்பன் கோவில் சந்நிதானத்தில் சில இளம் பெண்கள் அய்யப்பனை தரிசிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை உருவாக்க இது தொடர்பான புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக தேவசம்போர்டு அமைச்சர் காடகம்பள்ளி சுரேந்திரன் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
கொல்லத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தேவசம் போர்ட்டில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி சிறப்பு வழிபாட்டுக்கு அனுமதி பெற்று தன் குடும்ப பெண்களை அழைத்துச் சென்று அய்யப்பனை வழிபட வைத்ததாக கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்ன என்றால் தொழிலதிபருக்கு சலுகை காட்டிய இதே தேவசம் போர்டுதான் பருவ வயதுடைய பெண்கள் அய்யப்பனை வழிபடக் கூடாது என உச்சநீதிமன்றம் வரை சென்று பிடிவாதமாக போராடிக் கொண்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*