ஜெ சமாதியில் இன்று தியானங்கள் இடம் பெறலாம்!

அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏக்கள் அனைவரும் இன்று சென்னை வரவேண்டும் என்று அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டு தருவதற்கு அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கர்நாடகவை சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவரிடம் லஞ்சமாக 50 கோடி ரூபாய் பேரம் பேசியது தெரியவந்துள்ளது. இதனால் தினகரன் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருக்கிறது. சுகேஷ் சந்திராவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். தினகரன் விவகாரத்தால் தமிழக அரசியலிலும் பெரும் மாற்றங்கள் வரும் என்று கருதப்படுகிறது. இரண்டு அணிகளாக பிரிந்திருக்கும் அதிமுக கட்சி மீண்டும் ஒன்றாக இணையும் என்று கூறப்படுகிறது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம் இரு அணிகளும் இணைய யாருடன் வேண்டுமானால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வருடனான ஆலோசனையை முடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பன்னீர் முன்வந்தால் இணைந்து செயல்பட தயார் என்று அறிவித்தார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் உடனடியாக இன்று சென்னை வரவேண்டுமென்று கட்சி தலைமை உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன . முதல்வர் நேற்று மாநகருக்கு அர்ப்பணித்த போர்க்கப்பலை பார்வையிடும் படி எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்,சென்னை வரும் எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் பழனிச்சாமி மற்றும் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கவிருக்கிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவுகிறது. ஏறக்குறைய பன்னீர் அணியும் எடப்பாடி அணியும் இணைவது உறுதியாகிவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதனால் ஜெயலலிதா சமாதியில் இன்று பரபரப்பு தியானங்கள் இடம் பெறலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*