அதிமுகவை அமாவாசைகளாக்கிய குருமூர்த்தி!

அதிமுக மூன்றாக உடைந்துள்ளது. இப்போதைக்கு தினகரன் கட்சியில் இருந்து ஒதுங்கி விட்டாலும். அதிமுகவை ஒற்றுமையாக வைத்திருக்க ஜெயலலிதா என்ற ஒரு மையப்புள்ளி இருந்தது போல இன்று ஒரு புள்ளி இல்லை. இந்த ஆட்சி நீடிக்குமா நீடிக்காதா என்பதற்கு அப்பால் இன்று அதிமுகவில் நடக்கும் குழப்பங்களுக்கும் மோதல்களுக்கும் பிரிவுகளுக்கும் மொத்த சூத்திரதாரியாக சுட்டிக்காட்டப்படுவது துக்ளக் ஆசியர் குருமூர்த்தியை.
சோ ராமசாமி மறைவுக்குப் பின்னர் துகளக் ஆசிரியர் பொறுப்புக்கு வந்தார் குருமூர்த்தி. சோ ராமசாமி இந்துத்துவம், பாஜக போன்றவற்றின் ஆதரவாளராக இருந்தாலும் கூட தமிழகத்தில் அதன் வடிவமாக அவர் உணர்ந்தது அதிமுகவையும் ஜெயலலிதாவையும். அதனால் கடைசிவரை அவர் ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவும், அதன் பின்னர் சோ ராமாசாமியின் மறைவுமாக சசிகலா செல்வாக்குப் பெறுவதை பாஜக, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நடிகர் ரஜினிகாந்த் மூவருமே விரும்பவில்லை. அதன் வெளிப்பாடுதான் 14-01-2017 பொங்கல் நாளன்று நடந்து துக்ளக் இதழின் 47-வது ஆண்டு விழா.அந்த விழாவில் பேசிய குர்மூர்த்தி “சோ அவர்கள் குடும்ப அரசியலை கடுமையாக எதிர்த்தார். தமிழகத்தில் ஒரு கட்சிதான் குடும்ப அரசியலுக்குள் போய்க்கொண்டிருந்தது. இன்றைக்கு இன்னொரு கட்சியும் குடும்ப அரசியலுக்குள் போய்க்கொண்டிருக்கிறது. இதை யாராலும் மறுக்க முடியாது என்று கூறினார். இதை பார்த்துக்கொண்டு துக்ளக் சும்மா இருக்காது’ என்று அப்போது தெரிவித்தார்.
இதற்கு பதிலாக ஆண்டு தோறும் ம.நாடராசன் தஞ்சையில் நடத்தும் பொங்கல் விழாவில் பதிலளித்துப் பேசினார் அதில் “ தமிழகத்தை காவிமயமாக்க பாஜக திட்டமிடுகிறது. அதிமுகவை உடைக்கப் பார்க்கிறது. அதிமுக வுக்கு எதிராக குருமூர்த்தி தலைமையில் செயல்படுகின்றனர். என்னைப் போன்றவர்களுக்கு எந்த போலீஸ் பாதுகாப்பும் இல்லை. ஆனால், எந்தப் பொறுப்பிலும் இல்லாத குருமூர்த்திக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு? அனைத் தையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்’’ என்றார்.
பாஜக தங்களை அழிக்கத் துணிந்து விட்டது என்பதை சசிகலா தலையிலான அதிமுகவினர் உணர்ந்தே வைத்திருந்தனர். ஜனவரி பொங்கல் விழாவிலேயே அதை நடராஜன் வெளிப்படுத்தி விட்டார்.
நடராஜனின் பேச்சுக்கு டுவிட்டர் மூலம் பதிலளித்த குருமூர்த்தி “ குடும்ப ஆட்சிதான் நடத்துகிறோம் என நடராஜன் கூறியதன் மூலம் சசிகலாவை வெறும் தலைமையாக மட்டுமே முன்னிறுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது. வி.கே.சசிகலா என்பது போலி, நடராஜன்தான் உண்மையான முகம்’ என தெரிவித்ததோடு, மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘சசிகலா ரகசியமாக செயல்பட நினைக்கிறார். ஆனால், நடராஜன் அப்படி நினைக்கவில்லை. இருவருக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் இதுதான்’ என தெரிவித்துள்ளார்.
நடராஜன் உள்ளிட்ட உறவினர்களை அழைத்து தினகரனை வைத்து சசிகலா எச்சரிக்க அவர்கள் அமைதியாகி விட்டார்கள். அதன் பின்னர்தான் சசிகலா உறவுகளை அதிமுகவில் அப்புறப்படுத்தும் ஸ்கெட்ச் போடப்பட்டது. பன்னீரை உடைத்து வெளியில் கொண்டு வந்ததும். அதையும் மீறி சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கி கட்சியை ஒழுங்கு படுத்தி விட்டு சிறை சென்றதும். பின்னர் விஜயபாஸ்கர் மீது ரெய்ட் அடித்து அதையே அதிமுக அமைச்சர்களுக்கான எச்சரிக்கையாக்கி இப்போது தினகரனையும் விலக்கி வைத்தும் என…. துக்ளக் ஆண்டு விழாவில் “இதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு துக்ளக் சும்மா இருக்காது” என்ற குருமூர்த்தியின் அறிவிப்பு இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கிறது அதிமுகவில்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*