அம்பேத்கரும் தண்ணீர் தினமும்:முகுல் ஷர்மா

2016ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அம்பேத்கரை நீர்வளத்துறையின் தந்தை என்று அறிவித்தார் மத்திய நீர்வள மற்றும் நதிகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உமாபாரதி. 1942 முதல் நீர்வள மேம்பாட்டிற்கு அம்பேத்கர் அளித்த பங்களிப்பும் இத்துறையில் பல்வேறு கொள்கைகள் வகுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்பதாலும் அவருக்கு இந்தப்பட்டம் வழங்கப்படுவது மிகப்பொருத்தமான ஒன்று என்று அப்போது கூறினார். மத்திய நீர் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த “அம்பேத்கரின் வழியில் வளர்ச்சிக்கான நீர் வளமேலாண்மை” என்ற கருத்தரங்கில் பேசும்போது அம்பேத்கரின் பிறந்தநாளை நீர் தினமாக அனுசரிக்கும் அரசின் முடிவை அறிவித்தார். அதோடு “நீர்வளமேலாண்மைக்குஅம்பேத்கரின்பங்களிப்பு” என்ற மத்திய நீர் ஆணையத்தின் ஆய்வு ஒன்றை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் துவக்கும் முடிவையும்அறிவித்தார்.

அம்பேத்கரை முன்னிலைப்படுத்தும் அரசின் இந்த முடிவு பல தரப்பிலும் எதிர்ப்பார்பை உருவாக்கியது. நீர்வளம் குறித்தான அம்பேத்கரின் உண்மையான கவலைகளையும் தண்ணீருக்கான அவரின் நீண்ட நெடிய போராட்டத்தையும் முன்னிலைப்படுத்துவதாக இந்த அறிவிப்புகள் இருக்குமா என்பதில் யாதொரு தெளிவும் இல்லை.

அம்பேத்கரும் சுற்றுச் சூழலும்

இயற்கை, கிராமங்கள், நிலம், விவசாயம், தண்ணீர், சமூகம், தொழிற்துறை, தொழிற்நுட்பம், அறிவியல், வளர்ச்சி நவீனம் என்று பல துறைகளிலும் அம்பேத்கர் எழுதியும் பேசியும் வந்திருந்தாலும், சுற்றுப்புறச் சூழல் என்று வரும்போது அரசு, சிவில்சமூகம், சுற்றுப்புற சூழலியாளார்கள் ஆகியோரால் அம்பேத்கர் அதிகம் பேசப்படாதவராகவும் ஒதுக்கப்பட்டவராகவுமே இருக்கிறார். சுற்றுப்புறசூழல் குறித்தான விவாதங்களில் அம்பேத்கரின் பங்களிப்பை குறிப்பிடாமல் இருப்பது ஏதோ அவர் அரசியல் மற்றும் கல்வித்துறையில் மட்டும் கவனம் செலுத்தியவர் என்பதை போன்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளது. சுற்றுப்புறச் சூழல் குறித்து மகாத்மாகாந்தி, ஜவகர்லால்நேரு, இந்திராகாந்தி ஆகியோரை பிரதானப்படுத்திய சுற்றுப்புறசூழல் வரலாற்றாய்வாளார்களும் கல்வியாளர்களும் அம்பேத்கரை ஒதுக்கியேவைத்துள்ளனர். நவீன கலாச்சாரத்தின் மீது விமர்சனப் பார்வை கொண்டிருந்த மகாத்மாகாந்தியை ஒப்பிடும்போது அம்பேத்கரின் வளார்ச்சிக்கான திட்டங்களும் தொலைநோக்குப் பார்வையும் மேற்குலகத்தின் தாக்கத்தை கொண்டிருந்தது எனலாம்.

தண்ணீருக்கான பங்களிப்பு

தண்ணீரின் மீதான அம்பேத்கரின் பார்வை பல பரிணாமங்களை கொண்டது. பொருளாதார நிபுணரும் தலித்திய எழுத்தாளுருமான சுகதியோ தொராட், அம்பத்கரின் தண்ணீர் கொள்கைகளை பற்றிக் குறிப்பிடும்போது 1942-46 வரை தொழிலாளர்நலன், பாசனம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த அம்பேத்கரின் பல்வேறு பணிகளை குறிப்பிடுகிறார். முக்கியமாக பொருளாதார திட்டமிடல், தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கான திட்டங்களை திட்டமிடுதலில் அம்பேதரின் நேரடிப் பங்களிப்பை உறுதிசெய்கிறார்.
1942-47க்கு இடைப்பட்ட காலத்தில் நீர் மற்றும் மின்சாரத்திற்கான தேசிய கொள்கை வகுப்பதில் அம்பேத்கரின் உழைப்பு முதன்மையானது. இப்போது இருக்கும் பல திட்டங்களுக்கு வித்திட்டவர் அம்பேத்கர். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமானால், பாசனம் மற்றும் மின்சார உற்பத்தியில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான சிக்கல்களை தீர்க்கும் நதி பள்ளதாக்கு ஆணையத்தை அமைத்தது, பாசன திட்டங்கள் மற்றும் மின் உற்பத்தியை பெருக்கவும் கண்காணிக்கவும் தற்போதைய மத்திய நீர் ஆணையம் மத்திய மின்சார ஆணையம் போன்ற நிர்வாக அமைப்புகள் வேண்டுமென்று சொன்னது, தமோதர், மஹாநதி, சோன் ஆகிய ஆறுகளில் அணைகள் அமைத்தது ஆகியவற்றை சொல்லலாம். அம்பேர்கரின் திட்டங்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் இருந்து பார்க்கும்போது தொலைநோக்குப் பார்வையுடன் தைரியமாக செயல்படுத்தப்பட்டவையாகவே உள்ளன.

மிக முக்கியமாக அம்பேத்கர், நீரின் சமூக பண்பாட்டு கோணங்களை அறிந்தவராகவும் தலித்துகள் தண்ணீர் மீதான கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சாதிய மேலாதிக்கபடி நிலையில் தண்ணீர் முக்கியப்பங்கு வகித்ததை முழுவதுமாக அறிந்தவர் அம்பேத்கர். பல நூற்றாண்டுகளாக தலித்துகளை நேரடியாகவும் மறைமுகமாவும் ஒதுக்குவதற்கு தண்ணீரை உயர்சாதியினர் பயன்படுத்தி வந்தனர்.ஆறுகள், கிணறுகள், குளங்கள், தண்ணீர் குழாய்கள் என்று அனைத்து நீர் ஆதாரங்களையும் உயர்சாதிகளே சொந்தம் கொண்டாடி வந்ததுடன் அவற்றை நியாயப்படுத்த மதம் மற்றும் பண்பாட்டு நம்பிக்கைகளை நீர்நிலைகள் மீது விதைத்தனர். இதன்மூலம் தலித்துகளுக்கு நீர் என்பது வாழ்நாள் போராட்டமாகவும் வலியாகவும் மாறியது.

தண்ணீரும் சாதியும்

பார்ப்பனிய படைப்புகள் அனைத்தும் நீரின்மீது ஆழமான சாதிய நம்பிக்கையை விதைத்திருந்தன. சடங்குகளில் ஆரம்பித்து அன்றாட பழக்கங்கள், தண்ணீர் குடிக்கும் வழக்கம், குளிப்பது, மீன்பிடிப்பது, நீர்ப்போக்குவரத்து என அனைத்திலும் சாதி புகுத்தப்பட்டு, யார் யார் தண்ணீருக்கு சொந்தம் கொண்டாட வேண்டும் என்பதை சாதியபடி நிலைக்கு ஏற்றவாறு வகுத்திருந்தன பார்ப்பனிய படைப்புகள். இந்த நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் பலமுறை அம்பேத்கர் பலமுறை எதிர்கொண்டார். அதை அவரது வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளில் இருந்து அறியலாம். “சிறுவயதில் தாகத்தோடு நண்பர்களோடு தண்ணீருக்காக அலைந்து திரியும் சமயம் அசுத்தமான நீர்த்தேக்கங்களை நோக்கியே கைக்காட்டினார். இது சிறுவயது பீமுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. அப்போதுதான் தான் ஒரு தீண்டத்தகாத, நல்ல குடிநீர் மறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட உணவை உட்கொள்ளும் குடும்பத்தைசேர்ந்தவன்” என்று அம்பேத்கர் உணர்ந்ததாக அம்பேத்கரின் வரலாற்றை பதிவு செய்த தனஞ்செய்கீர் எழுதியுள்ளார்.
1927-ல் நடைப்பெற்ற மகட்சத்தியாகிரகம் அம்பேத்கர் மற்றும் தலித்துக்களின் நீர் உரிமை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. போராட்டத்தின் முக்கிய நோக்கம் பொது நீர்நிலைகளில் இருந்து தலித்துகள் நீர் எடுப்பதை உறுதி செய்வது. இந்த போராட்டம் அம்பேத்கரின் வாழ்வின் முக்கியமாக தருணமாக கருதக்கூடியது.
புத்தரும் அவரது தம்மமும் என்ற புத்தகத்தை எழுதியஅம்பேத்கர், மகட்சத்தியாகிரகத்திற்கான வழிமுறையை புத்தரின் வாழ்வில் இருந்தே எடுத்து உபயோகித்தார். சாக்கிய மற்றும் கோலியா நாடுகளுக்கு இடையேயான நீர் பிரச்சனையின் போது யாருக்கு நீர் உரிமை வேண்டும் என்பது குறித்தான விசாரணை வேண்டும் என்ற புத்தரின் வழிகாட்டுதலின்படி மகட் போராட்டத்தின்போது தலித்துகளுக்கான உரிமைகள் நீர்நிலைகளிலும் நிலைநாட்டப்பட வேண்டும் என்று உறுதியாக நின்று பெற்றுத் தருகிறார். சாதிய மதபாகுபாடு இல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் ஜனநாயகப்படுத்தபட வேண்டும் என்ற அம்பேத்கரின் நிலைப்பாடு உறுதியாகிறது.

மாறுபட்ட நீர் கொள்கை

மத்திய அரசு அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ஐ தண்ணீர் தினமாக அறிவித்தபோது அம்பேத்கரின் தண்ணீர் குறித்தான கவலைகள் ஆதங்கங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. நீர்வள மேலாண்மை பெருவெள்ள மேலாண்மை ஆகியவை சீர்திருத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது.அம்பேத்கரின் எண்ணத்தில் வழியாக இந்த சீர்திருத்தங்களை செய்யமுடியும். அப்படிச் செய்யும்போது சாதிய அநீதிக்குள் தண்ணீர் மீண்டும் செல்லாமல் இருக்கும், அதிகாரம் உயர்சாதிய மட்டத்துக்குள் சிக்கிவிடாத நீர்நிலை மேம்பாடு சாத்தியமாகும். அம்பேத்கரின் சிந்தனைகள் பொறியியல், திட்டமிடல், மேலாண்மை ஆகியவற்றை தாண்டி மக்களிடம் இருந்து நீர்வள சீர்திருந்தங்களை பெறவழிவகுக்கும்.

கட்டுரையாளர் குறிப்பு:

முகுல் ஷர்மா சாதி, சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை பற்றி எழுதி வருகிறார். சுற்றுச்சூழல், தொழிலாளர் மற்றும் மனித உரிமை பிரச்சனைகள் (environmental, labour and human rights issues) என்ற நூலினை எழுதியுள்ளார். அவரது எழுதியுள்ள, சாதி மற்றும் இயற்கை: தலித்துகள் மற்றும் இந்திய சுற்றுச்சூழல் அரசியலில் (Caste and Nature: Dalits and Indian Environmental Politics) என்ற புத்தகத்தை ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிடவுள்ளனர்.

நன்றி: Scroll.in

தமிழில்: சரவணன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*