தினகரன் தேடப்படும் குற்றவாளி!

இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெறுவதற்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி தினகரன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் நேற்று முன் தினம் விசாரணை நடைபெறவிருந்த நிலையில் கர்நாடகாவை சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவரை டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்ததில் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற்று தர கோரி டிடிவி தினகரன் தன்னிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் முதற்கட்டமாக தனக்கு 1 கோடியே 30 லட்சம் ரூபாய் அளித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் தினகரனும் சுகேஷும் தொலை பேசியில் பேசியதற்கான ஆதாரங்களும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தினகரன் மீதும் சுகேஷ் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக தினகரனும் இரண்டாவது குற்றவாளியாக சுகேஷும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் தினகரன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. தினகரனிடம் நேரில் விசாரணை நடத்த டெல்லி காவல்துறையினர் நேற்று சென்னை வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் நேற்று வரவில்லை.

இந்நிலையில் தினகரன் நாட்டைவிட்டு தப்பி செல்லக்கூடும் என்ற தகவல்கள் வெளியானதை தொடர்ந்து டெல்லி காவல்துறையினர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று டிடிவி தினகரனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பை டெல்லி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு தப்பி செல்ல இருப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று தினகரன் கூறியுள்ளார். டெல்லி காவல்துறையினர் தினகரனின் ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். டெல்லி காவல்துறையினர் சென்னை வந்து தினகரனை விசாரணை செய்யும் போது அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*