நேற்றே ஒதுங்கிவிட்டேன் : தினகரன்

கட்சியிலிருந்து நான் நேற்றே ஒதுங்கிவிட்டேன் என்று அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறை சென்ற பிறகு அவர் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரையும் பன்னீர் அணிக்கு செல்லாமல் பாதுகாத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அமைவதற்கு திவாகரனும், தினகரனும்தான் காரணமாக இருந்தனர்.

இதில் தினகரன் பெரிதளவில் செயல்பட்டார். சசிகலா சிறைக்கு செல்லும் போது  தினகரனை கட்சியின் துணை பொதுச் செயலாளர்  பதவியில் அமரவைத்து சென்றார். அதன்பின் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும், கட்சியும் தினகரனின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலிலும் தினகரன் வேட்பாளராக களமிறங்கினார். அப்போது வாக்காளர்களுக்கு தினகரன் அதிகளவில் பணம் கொடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து அவரது ஆதரவாளரான அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மூத்த அமைச்சர்கள் கூறிவந்த நிலையில் அதற்கு தடையாக தினகரன் இருந்தார். இதனால் தினகரன் மீது அமைச்சர்களின் அதிருப்தி எழ ஆரம்பித்தது. இதனைத் தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற்று தர லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் அவர் மீதான அமைச்சர்களின் அதிருப்தியை எதிர்ப்பாக மாற்றியது. இனி தினகரனை கட்சிக்குள் வைத்திருந்தால் கட்சியையும் ஆட்சியையும் தக்கவைக்க முடியாது என்று முடிவெடுத்த அமைச்சர்கள் தினகரனையும், சசிகலா குடும்பத்தையும் ஒதுக்க முடிவு செய்து பகிரங்கமாக அறிவித்தனர். அனைத்து எம்.எல்.ஏக்களும் தன்னுடனே உள்ளனர் என்றும் இன்று பிற்பகல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் கூறினார். ஆனால் செங்கோட்டையன் கூறுகையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த முடியாது என்று கூறினார். இதனால் தினகரன் கடும் அதிருப்தியடைந்திருக்கிறார்.

இந்நிலையில் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் தினகரன் கூறுகையில்,

நான் கட்சியிலிருந்து நேற்றே ஒதுங்கிவிட்டேன். எனது சகோதரர்களுடன் சண்டை போட விரும்பவில்லை. அமைச்சர்கள் அனைவரும் ஏதோ அவசர கதியில் முடிவெடுத்திருக்கின்றனர். அவர்களுடன் போட்டி போட்டு கட்சியை பலவீனப்படுத்த நான் விரும்பவில்லை. யாரோ சிலர் மேல் உள்ள அச்சத்தால் கட்சியிலிருந்து என்னை ஒதுக்கியிருக்கிறார்கள். அமைச்சர்கள் செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அமைச்சர்கள் ஏதோ ஒரு பயத்தில் இருக்கிறார்கள். துணை பொதுச் செயலாளர் பொறுப்பை சசிகலாவே அளித்தார். அவரிடம் கலந்தாலோசித்துவிட்டு நான் முடிவு எடுப்பேன். எந்த காலத்திலும் கட்சி பலவீனமடைய நான் காரணமாக இருக்கமாட்டேன். இந்த கூட்டத்துக்கு என்னை அழைத்திருந்தாலும் நான் சென்றிருப்பேன். கட்சி அலுவலகத்தை பன்னீர் செல்வம் அணி கைப்பற்ற முயற்சிக்கிறது. என்னை நீக்குவதால் அமைச்சர்களுக்கு நன்மை நடக்கும் என்றால் நடக்கட்டும். இந்த பிரச்னைகளுக்கு பின்னணியில் பாஜக கட்சி இருக்கிறதா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. நீதிமன்ற விவகாரங்களை முடித்த பிறகு சசிகலாவை சந்திப்பேன். என் கையில் தற்போது பாஸ்போர்ட்டே இல்லை நான் எப்படி இந்தியாவை விட்டு செல்வேன். என்னை கட்சியிலிருந்து விலக சொன்னாலும் விலகுவேன். எனக்காக தேர்தல் பணியாற்றிய அமைச்சர்களுக்கு நன்றி! என்று தினகரன் கூறினார். அமைச்சர்களின் இந்த முடிவு நிச்சயம் தினகரனுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றே கருதப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*