சுகேஷை வைத்து எடப்பாடி குழுவை வழிக்கு கொண்டு வர திட்டம்!

பன்னீர் அணிக்கும் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இக்கட்டான நிலைக்கு சென்றுள்ள நிலையில்,  இரட்டை இலை சின்னத்தை மீட்டு தர தினகரனிடமிருந்து லஞ்சம் வாங்கிய சுகேஷ் சந்திரசேகர் டெல்லி காவல்துறையினரால் சென்னை கொண்டுவரப்பட்டார்.தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் இரட்டை இலை சின்னத்தை மீட்டு தர கோரி அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் தினகரனிடமிருந்து 50 கோடி ரூபாய் லஞ்சம் பெறவிருந்த சுகேஷை கடந்த 18-ஆம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டதில் சின்னத்தை பெற்று தர தினகரன் 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாகவும் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சென்னையிலிருந்து கேரளா வழியாக டெல்லிக்கு பண பரிமாற்றம் நடைபெற்றதாக தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீதும் தினகரன் மீதும் டெல்லி காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் முதல் குற்றவாளியாக தினகரனும், இரண்டாவது குற்றவாளியாக சுகேஷூம் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு சென்னை வந்த டெல்லி காவல்துறையினர் தினகரனிடம் நேரில் சம்மன் வழங்கி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வழக்கு தொடர்பாக எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் நேரில் ஆஜராக வேண்டுமென்றும் கூறிவிட்டு சென்றனர்.

இந்நிலையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரா இன்று சென்னைக்கு கொண்டுவரப்பட்டார். அவர் சென்னைக்கு ரகசியமாக அழைத்து வரப்பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் யார்? யார்? சம்பந்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவே அவர் சென்னை அழைத்து வரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. விசாரணை முடிந்த பிறகு அவர் டெல்லிக்கு திரும்பவும் அழைத்து செல்லப்படவிருக்கிறார். சுகேஷ் சந்திரா சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருப்பதால் தமிழகத்திலிருந்து இன்னும் யார்? யார்? சிக்குவார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் பல முக்கிய டெல்லி புள்ளிகளும் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுகேஷ் சந்திரா மூலம் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

சசிகலாவை அதிமுகவில் இருந்து விலக்கி வைத்திருக்கும் நிலையில் ஆட்சி, கட்சி இரண்டையுமே கேட்கும் பன்னீர் அணியிடம் பணிந்து செல்ல எடப்பாடி குழுவினர் தயாராக இல்லை. அதனால் ரெய்ட் அடித்து  விஜயபாஸ்கரை வழிக்கு கொண்டு வந்தது போல சுகேஷ்சிடம் வாக்கு மூலம் பெற்று மேலும் சில அமைச்சர்களை விசாரணை வளையத்தினுள் கொண்டு வரலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*