ராமர் கோவில் அமைவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : உமாபாரதி

அயோத்தி பிரச்னைக்காக எந்த வழக்கையும் சந்திக்க தயார் என்று பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான உமாபாரதி கூறியுள்ளார்.கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதியை ஹிந்துத்துவா அமைப்புகள் இடித்தன. இதனால் நாடு முழுவதும் கடும் கலவரங்கள் ஏற்பட்டு பல உயிர் சேதங்கள் ஏற்பட்டன. இந்த கலவரத்துக்கு பாஜக கட்சியின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த கலவரம் தொடர்பாக இரண்டு வகையான வழக்குகள் நடைபெற்று வருகின்றன. பெயர் குறிப்பிடாத கரசேவகர்களுக்கு எதிரான வழக்கு லக்னோ நீதிமன்றத்திலும், அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு ரேபரேலி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிறது. அத்வானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரேபரேலி நீதிமன்றம் ரத்து செய்தது இதனை அலகாபாத் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதனை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி. கோஷ், ஆர்.எல். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி  உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து உமாபாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், அயோத்தி பிரச்னைக்காக எந்த தண்டனையையும் ஏற்க தயார் . முன்னர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நடைபெற்ற இயக்கத்தில் நானும் ஒரு அங்கமாக பங்கேற்றதை எண்ணி பெருமைப்படுகிறேன். இதற்காக மன்னிப்பு கேட்கவோ, வருத்தப்படவோ தயாராக இல்லை என்ற நிலைப்பாட்டில் நான் எப்போதுமே உறுதியாக இருந்து வந்துள்ளேன். அயோத்தியில் ராமர் கோவில் அமைவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் சதித்திட்டம் ஏதுமில்லை, எல்லா விவகாரமும் வெளிப்படையாகவே நடந்தது.
அயோத்தி விவகாரம், கங்கை நதி உள்ளிட்டவைகளுக்காக  எவ்வித தண்டனையையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த இரண்டு எம்.பி.க்கள் இருந்த நிலைமாறி, இன்று மத்தியில் பா.ஜ.க. அரசு அமையும் அளவுக்கு ராமர் கோயில் விவகாரம், பா.ஜ.க.வின் எழுச்சிக்கு துணையாக இருந்துள்ளது. எனினும், தற்போது  நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறேன்.  ராமர் கோயில் கட்டுவதற்காக எனது வாழ்க்கையை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன். இதற்கான உறுதிமொழியை ஏற்பதற்காக இன்று அயோத்தி நகருக்கு புறப்பட்டு செல்கிறேன் என்றும் உமா பாரதி தெரிவித்துள்ளார். உமா பாரதியின் இந்த கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பல உயிர்களை கொன்ற விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்கவோ வருத்தம் தெரிவிக்கவோ முடியாது என்று பகிரங்கமாக உமா பாரதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*