அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை!

பன்னீர் செல்வத்தின் கடும் நிபந்தனைகளால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி.

இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்பட திட்டமிட்டிருந்தன. இதனால் இரு அணியினரும் பேச்சுவார்த்தை குழு அமைப்பதில் மும்முரமாக இருந்தன. எடப்பாடி அணி பேச்சுவார்த்தை குழுவை அமைத்திருக்கிறது. நேற்று நடந்த பன்னீர் அணி ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு கே.பி முனுசாமி பேசுகையில் சசிகலாவிடமும், தினகரனிடமும் ராஜினாமா கடிதம் பெற வேண்டும், அவர்களை நீக்கி விட்டதாக அறிக்கை விட வேண்டும், சசி குடும்பத்தை சேர்ந்த 30 பேரையும் மொத்தமாக நீக்க வேண்டும் அப்போதுதான் பேச்சுவார்த்தை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் எடப்பாடி தரப்பு கடும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இதனால் இரு அணிகளும் தற்போது இணையும் சூழ்நிலை இல்லை என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை தொடங்க முட்டுகட்டையாக இருந்தது ஜெயக்குமார் பன்னீரை விமர்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பன்னீர் அணியின் கிடுக்கிப்பிடி நிபந்தனைகளால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஜெயக்குமார், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, எம்.சி.சம்பத் போன்ற மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எடப்பாடி அணி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தை குழுவில் யார்? யார்? இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. அக்குழுவில் ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த பேச்சுவார்த்தை குழுவில் இருக்கும் அமைச்சர்களே இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதால் பல முக்கிய முடிவுகள் இதில் எடுக்கப்பட்டன என்று சொல்லப்படுகிறது. பன்னீர் அணியின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு போவதா? இல்லை தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை கொண்டு பன்னீர் அணியை வழிக்கு கொண்டுவருவதா? போன்ற ஆலோசனைகளும் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக  நாளை டெல்லி செல்கிறார். அப்போது பிரதமர் மோடியையும் தனியாக சந்தித்து பேசவிருக்கிறார். அவரிடம் பன்னீரின் நிபந்தனைகள் குறித்தும், தமிழக அரசியல் சூழல் குறித்தும் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்தும் இன்று ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது என்று கூறப்படுகிறது. மேலும் முதலமைச்சர் பதவியை விட்டு கொடுக்க கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆலோசனை கூட்டத்தில் என்னென்ன விவாதிக்கப்பட்டன என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதுவரையிலான ஆலோசனை கூட்டங்கள் அமைச்சர் இல்லங்களிலும், தலைமை செயலகத்திலும் நடைபெற்று வந்த நிலையில் கட்சி சார்ந்த ஆலோசனை கூட்டம் தற்போது தலைமை செயலகத்தில் நடைபெற்றது. மேலும் தினகரன் இல்லாமல் நடந்த முதல் ஆலோசனை கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  சி.வி.சண்முகம், எங்களுக்கு கருத்து வேறுபாடு நிலவுகிறது. அதை களைய அமர்ந்து பேச தயார். இரு அணிகளும் இணைந்து செயல்பட வேண்டும். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும். அதுவே எங்கள் நோக்கம் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*