இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே:வாசுகி பாஸ்கர்!

2008ஆம் ஆண்டு காவிரி நீர் பிரச்சனை சம்பந்தமாக தமிழ் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் நடிகர் சத்யராஜ் கலந்துகொண்டு உணர்ச்சிபூர்வமாக பேசியது கன்னடர்களை இழிவுபடுத்தும் செயல் என கன்னட அமைப்பு தெரிவித்தது. அதற்காக மன்னிப்பு கேட்டால்தான் பாகுபலி-2 படத்தை வெளியிட முடியும் என மிரட்டல் விடுத்தனர். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் நலனை மனதில் கொண்டு ‘பாகுபலி-2’ வெளியாக வேண்டும் என்ற காரணத்தால் சத்யராஜ் இன்று வருத்தம் தெரிவித்திருந்தார். இதுகுறித்து சமூக வலைதள பதிவர் வாசுகி பாஸ்கர் எழுதியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

#வாசுகி பாஸ்கர்

சத்யராஜ் பாகுபலிக்கு சம்பளம் வாங்கி விட்டார், கர்நாடாகாவில் ரிலீஸ் ஆகாமல் போனால் அவருக்கு எதுவுமில்லை.

ஆனால் ரியாலட்டி என்னன்னு யோசிக்கணும், ராஜமௌலி request பண்ணி கேட்டு இருக்கலாம், அதை மறுக்க முடியாது, அப்பவும் “கர்நாடக மக்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்” என்று தான் சொல்லியிருக்கிறார்.

வாட்டாள் நாகராஜ் ஒட்டு மொத்த கர்நாடக மக்களின் பிரதிநிதியாக நினைத்து கொண்டாலும், உண்மையில் அவன் பிரதிநிதி இல்லையே. அது அவன் பிழைப்பதற்கான எச்ச அரசியல், இந்த ஒன்பது வருடத்தில் எத்தனையோ சத்யராஜ் படங்கள் வந்திருக்கிறது, இப்போது இந்த பிரச்னையை எழுப்புவது பெரிய படஜெட் படம், நல்ல பணம் பார்க்கலாம் என்று தான், இதை தவிர வேறெந்த முறையில் வாட்டாள் நாகராஜ் போன்ற அயோக்கியர்கள் நியாயமாக சம்பாதித்து விட முடியும்?

ஆகையால் இதை இரு மாநில மானபிரச்னையாக பார்ப்பது நியாயமாகாது.

மனிதனுக்கே உரிய அடிப்படை மானுட மாண்பு, பாதிக்கப்பட போவது நாமாக இருந்தால் அதை துணிந்து எதிர்க்கலாம், ஆனால் இன்னொருவராக இருக்கும் பட்சத்தில் வறட்டு கெளரவம் பெரும்பாலும் நாம் யாருக்குமே இருக்காது. அதுதான் இயல்பு.

தசாவதாரம் படத்தில் வைணவ கதாபாத்திரத்தில் வரும் நம்பி, சிவன் பெயரை உச்சரிக்காவிட்டால் கடலுக்குள் இறங்குவோம் என்ற போதும், உச்சரிக்காமல் மரணிப்பான். ஒருவேளை நம்பியின் பிள்ளையை சாகடிப்போம் என்று சொல்லியிருந்தால், நம்பி “ஓம் நமசிவாய” என்று சொல்லியிருக்கக்கூடும்.

குருதிபுனலில் அர்ஜுனனின் மகளை காப்பாற்றுவதற்காக கௌதமியின் முந்தானை இறங்கும், இந்த எடுத்துக்காட்டுகள் மிகைப்படுத்தலாக இருந்தாலும் நாம் எல்லோருமே பெரும்பாலும் அடுத்தவர் பாதிக்கப்படுவதை விரும்புவதில்லை.

இதையெல்லாம் தாண்டி உருவானது தான் மனிதனின் வறட்டு மானம் மட்டை மரியாதை எல்லாம்.

இதே மன்னிப்பை மாநில முதல்வர் கேட்டிருந்தால் தான், அதை மாநில மக்களை பிரதிபலிக்கும் விவகாரமாக எடுத்து பொங்கலாம்.

சத்யராஜ் தயாரிப்பாளர் இல்லை, நாயகன் இல்லை, இயக்குனரில்லை, படத்தில் ஒரு கதாபாத்திரம்.

அடுத்தவருக்காக இறங்கி போகிறவர்கள் மேன்மையானவர்களே, அதை யார் பரிகாசம் செய்தாலும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*