தினகரன் நாளை நேரில் ஆஜர்!

இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெறுவதில் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் டெல்லி காவல்துறையில் நாளை ஆஜராக உள்ளார்.

ஜெயலலிதா மறைவையடுத்து அவர் வென்ற தொகுதியான ஆர்.கே.நகருக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் போட்டியிட இருந்த அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்து வந்தன.ஆனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. இதனையடுத்து இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம் என்று தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெறவிருந்தது. இதற்காக இரு அணியினரும் பிரமாண பத்திரம் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவரை டெல்லி காவல்துறையினர் கடந்த 16-ஆம் தேதி கைது செய்தனர். அவரிடம் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற்று தர 50 கோடி ரூபாய் லஞ்சம் தருவதற்கு பேரம் பேசியதாகவும், முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் வரை பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து தினகரன் மீதும், சுகேஷ் மீதும் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தினகரன் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர் என்பதால் அவர் இந்தியாவை விட்டு தப்பி செல்லலாம் என்று கருதப்பட்டது. அதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது டெல்லி காவல்துறை. இதனையடுத்து தினகரனிடம் கடந்த 19-ஆம் தேதி டெல்லி காவல்துறையினர் நேரில் சம்மன் வழங்கினர்.

இந்நிலையில் தினகரனிடம் வழங்கப்பட்ட சம்மனில் இந்த வழக்கு தொடர்பாக வரும் சனிக்கிழமை டெல்லி காவல்துறையில் நேரில் ஆஜராக வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது. ஆஜராக தினகரன் 3 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார். ஆனால் இதனை டெல்லி காவல்துறை உறுதிபடுத்தவில்லை. இதனால் தினகரன் நாளை டெல்லி காவல்துறையிடம் நேரில் ஆஜராக இருக்கிறார். அப்போது அவரிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறவிருக்கிறது. விசாரணை முடிவில் தினகரன் நாளையே கைது செய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தால் அவர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*