மதியம் இரண்டு மணிக்கு தினகரனிடம் விசாரணை!

இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டெல்லி காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டு சென்றார் தினகரன்.

முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டு தருவதற்கு கர்நாடகாவை சேர்ந்த சுகேஷ் சந்திரா என்பவரிடம் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் லஞ்சம் தருவதற்கு பேரம் பேசியது தெரியவந்தது. கடந்த 16-ஆம் தேதி டெல்லி நட்சத்திர ஹோட்டலில் வைத்து சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தினகரன் 50 கோடி ரூபாய் லஞ்சம் தர பேரம் பேசியதும் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் வரை பண பரிமாற்றம் நடந்ததாகவும் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து தினகரன் மீதும் சுகேஷ் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தினகரனுக்கு கடந்த 19-ஆம் தேதி டெல்லி காவல்துறையினரால் சம்மன் வழங்கப்பட்டது. அதில் 22-ஆம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. சனிக்கிழமை ஆஜரானால் விசாரணை முடிவில் தாம் கைது செய்யப்படலாம் நீதிமன்றத்தின் விடுமுறை நாளான ஞாயிறு ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் நேரில் ஆஜராக மூன்று நாள் அவகாசம் அளிக்கும்படி தினகரன் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை டெல்லி காவல்துறையினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் டெல்லி காவல்துறையிடம் நேரில் ஆஜராக தினகரன் விமானம் மூலம் டெல்லி சென்றார். மதியம் 2 மணிக்கு அவரிடம்  விசாரணை தொடங்கவிருகிறது. விசாரணையில் தினகரனுக்கும், சுகேஷூக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? இதில் இன்னும் யார்? யார்?  சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் போன்ற பல கேள்விகள் கேட்கப்படும் என தெரிகிறது. மேலும் தினகரனும், சுகேஷூம் தொலைபேசியில் பேசிய உரையாடல்களை காண்பித்தும் தினகரனிடம் விசாரணை மேற்கொள்ள டெல்லி காவல்துறையினர் திட்டமிட்டிருக்கின்றனர். அதனால் விசாரணை முடிவில் தினகரன் கைது செய்யப்படவே அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தினகரன் டெல்லி செல்லும் இதே விமானத்தில்தான் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் பல்வேறு அரசியல் சூழல் குறித்து விவாதிக்க டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*