கொடநாடு காவலாளியைக் கொன்று ’ஜெ’ ஆவணங்கள் திருட்டு!

ஜெயலலிதாவுக்கு இந்தியா முழுக்க சொத்துக்கள் இருக்கின்றன. கொடநாடு, சிறுதாவூர் போன்ற இடங்களில் பிரமாண்டமான பங்களாக்கள் அவருக்கு உண்டு. அடிக்கடி இந்த பங்களாக்களில் ஓய்வெடுத்து வந்தார்.
அவர் மறைவுக்குப் பின்னர் இச்சொத்துக்கள் யாருக்கு என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில் நீதிமன்றங்கள் மூலமாகவே இச்சொத்துக்களை உரிமையுடவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று தகவல் வெளியான நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் உள்ள காவலாளி கொலை செய்யப்பட்டு அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் 1600 ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டமும் பங்களாவும் உள்ளது இதற்கு சசிகலா, இளவரசி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.
கடந்த 1992-ம் ஆண்டில் வாங்கப்பட்ட இந்த எஸ்டேட்டில் தேயிலை, கொய் மலர் ஆகியவை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் 600 தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
5 சதுர அடியில் பிரமாண்டமான வீடும் இந்த தோட்டத்தினுள் கட்டப்பட்டிருந்தது. ஹேலி பேட் வசதி, நீச்சல் குளம், மினி தியேட்டர் என அதி நவீன சொகுசு பங்களாவான இந்த பங்களாவுக்கு தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நேபாளத்தைச் சேர்ந்த ஹோம்கர் என்ற வாட்ச் மேன் அங்கு இரவுப்பணியில் இருந்துள்ளார். அப்போது வந்த மர்ம கும்பல் ஹோம்கரை தாக்கியது இன்னொரு காவலாளி கிஷன் பகதூர் வந்து தடுக்க அவரையும் அக்கும்பல் தாக்கியது. இருவரும் நினைவிழந்து விழுந்த நிலையில் பரிதாபமாக ஹோம்கர் உயிரிழந்தார்.
காலை தோட்டத் தொழிலாளர்கள் பார்த்துதான் போலீசுக்கு தகவல் சொல்ல ஹோம்கரின் உடலை மீட்டு சோதனைக்கு அனுப்பி விட்டு கிஷன் பகதூரை மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு என்ற விவாதங்கள் நடந்து வரும் நிலையில் அந்த தோட்டத்தின் இயக்குநர்கள் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் இருக்கும் நிலையிலும், டெல்லி போலீசாரிடம் தினகரன் சிக்கியிருக்கும் நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் நடந்துள்ள கொலை அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. பல நூறு கோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை குறி வைக்கும் மாஃபியாக்கள் காவலாளிகளைக் கொன்று ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*