“அதன் பெயர் சௌந்தர்யம்” -கவிதா சொர்ணவள்ளி-4

காதலையும் சுயமரியாதையையும் பற்றித்தான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் “கள்ளக்காதல்” பற்றி அத்தனை பெண்களும் கொந்தளிப்புடன் இருப்பதாலும் வாசிக்கத் தெரிந்த நாள் முதலாகவே இந்த “கள்ளக்காதல்” என்கிற பதத்தின் மீது (பதத்தின் மீது மட்டுமே) அருவருப்பான உணர்வு இருந்ததாலும் “ஒரே காதல்” என்கிற கருத்தில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லாதிருப்பதினாலும் கள்ளக்காதல் பற்றியே எழுதலாம் என்று யோசித்து….எழுதி முடித்தாகிவிட்டது.

காதல் என்றால் என்ன ? கள்ளக்காதல் என்றால் என்ன என்று கேட்டால்…

எல்லாமே நம் வசதிக்காக நாம் சொல்லிக்கொள்கிற வார்த்தைகள் அல்லது பூசிக்கொள்கிற வண்ணங்கள். அவ்வளவே. ஒருவனுக்கு ஒருத்தி என்பதை மட்டுமே இவர்கள் காதல் என்று வரையறுப்பார்கள். அதற்கு அடுத்து வரும் எல்லாவற்றையும் கள்ளக்காதல் என்றே பெயரிட்டு அழைப்பார்கள்.

ஒருவரே இரண்டு பேரை காதலிக்கலாமா என்றால்….

அதற்கு மேலும் காதலிக்கலாம். ஆனால் நடைமுறையில் அது மிகவும் சிரமம் மிகுந்தது. காதலை விடவும் சிரமமானது நேரம் ஒதுக்குதலில் தொடங்கும் இதற்கான அடிப்படை பிரச்சனை. இரண்டு பேர் அல்லது நான்கு பேர் அல்லது எத்தனை பேரோ, அவர்களுக்கிடையிலான possessiveness கையாளமுடியாததாக, பீதியை ஏற்படுத்தக்கூடிய அளவில் வளரும். insecurity என்பது காதலை விடவும் அதி தீவிரமாகி, காதலிப்பவர்களை விழுங்கி சக்கையாக வெளியில் தள்ளும்.

என்றால் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு “கஷ்டமோ நஷ்டமோ கட்டினவனே கண்கண்டவன்” என்று செட்டில் ஆகி விடலாமா… என்று கேட்டால்…

பெரும்பான்மை சமூகம் அப்படித்தான் இருக்கிறது. ரிஸ்க் எடுக்க பயப்படுகிற ரிஸ்க் எடுக்க தயங்குகிற “கண்ணகியாகவும், ராமனாகவும்” சமூகத்தின் முன் நிறுவப்படுகிற பெருமையை கைகொள்வதற்காக மட்டுமே ரிஸ்க் எடுக்க விரும்பாத சமூகமாக இருக்கிறது.

ஆனால் ரிஸ்க் எடுப்பது என்பதை தங்களுடைய basic instict என்று தீவிரமாக நம்புகிற அப்படியே வாழ்கிற கூட்டமொன்று எப்போதும் உண்டு. அவர்கள்தான் இந்த உலகத்தை பரபரப்பாகவும் அழகாகவும் வைத்திருக்கிறார்கள்.

சமூக ஊடகங்கள் வந்தபின்புதான் பெண்களுக்கு பெரும் வெளி ஒன்று திறந்திருக்கிறதாக சொல்வது உண்மையா? என்றால் அது ஒரு மாயை. யானையை தடவிப்பார்த்து மரமென்று சொல்கிற மாயை.

பெண்களும் ஆண்களும் இப்போதுதான் நிறைய கண்காணிப்பு வளையத்துக்குள் வந்திருக்கிறார்கள். பரஸ்பரம் தங்களது இணைகளைக் கண்காணிப்பதை வேலையாக வைத்துக்கொண்டு திரிவது இரண்டு தரப்பிலுமே நடக்கிறது. எதையும் அனுபவிப்பதைத் தாண்டி அதைப் பற்றி பேசி பேசியே ஆறுதலடைவது அதிகரித்திருக்கிறது. இந்த காதல் மேட்டரிலும் அதுதான் நடக்கிறது. APU & APA க்கள் பெருகுவதை நீங்கள் இந்த அடிப்படையில்தான் புரிந்துகொள்ளவேண்டும்.

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான அம்சம் என்ன?

இது நம் இணைக்கு தெரிந்துவிட்டால் எப்படி அதை கையாளப்போகிறோம் என்பது இதில் முக்கிய அம்சம். உனக்காகத்தான் என் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறேன், உனக்காகத்தான் இவ்வளவு சிரமப்பட்டிருக்கிறேன் என்பது தொடங்கி அதுவரையான பல கிளிஷேவான claim களை இல்லாமலாக்கிவிடும் வல்லமை கொண்டது ஒரு screen shot. இதை எதிர்கொள்ளமுடியும் என்றால் ‘சொல்லு பேபி…’ என்று களத்தில் இறங்கலாம்.

தனது இரண்டாவது காதலைப் பற்றி முதல் காதலிடம் சொல்லிவிடுவது நல்லதா கெட்டதா?

சொல்லவே தேவையில்லை. அது முதல் காதலை அவமதிக்கும் செயல். தெரிந்துவிட்டால், ஆமாம் என்று நேர்மையாக ஒத்துக்கொள்ளலாம். கண்டிப்பாக சண்டை வரும். எந்த கட்டத்திலும் என்ன செய்யலாம் சொல்லுங்க… என்று உரையாடலுக்குத் தயாராகலாமே தவிர உடல் ரீதியான அல்லது மன ரீதியான வன்முறைகளில் இறங்கக்கூடாது. மற்றபடி இணையின் அந்தரங்க விஷயம் தெரியவரும் பட்சத்தில் ‘கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன்… என்று மார் தட்டுவது நமக்கு நாமே சூடு வைத்துக்கொள்வதற்கு ஒப்பானது. ‘சரி… அதுக்கு என்ன இப்ப…’ என்ற கேள்வியை எதிர்கொள்ளவேண்டிய ஆபத்து அதில் இருக்கிறது. அது நீண்ட கால காயத்தை உண்டாக்கும்.

தங்களது காதலனோ, காதலியோ கணவனோ மனைவியோ இன்னொருவருடன் காதலில் இருப்பதாக தெரியவரும்போது என்ன செய்யவேண்டும்?

நீ என்னை மோசமாக நடத்தியதால் தான் நான் இன்னொரு காதலைத் தேடி போகவேண்டி இருந்தது என்று குற்றம் சாட்டாமல் இருப்பது ரொம்பவும் முக்கியம். தனது ஆண்மைக்கு இழுக்கு வந்துவிட்டதாக ஆண் நினைக்க வேண்டியதில்லை. பெண்ணுக்கும் அதேதான். நம்முடைய எந்த குறை மற்றவளை/மற்றவனை நோக்கிப் போகவைத்தது என்ற ஆராய்ச்சியில் இறங்கக்கூடாது. எந்தக் குறையும் இல்லாதவர்கள்தான் நிறைய காதலில் ஈடுபடுபவர்களாக இருப்பார்கள். சும்மாச்சுக்கும் தப்பித்துக்கொள்வதற்காக கூட இணையின் மீது குறை சொல்லக்கூடும்.

இது எல்லாமும் தாண்டி ஒன்றிருக்கிறது. அது ஒற்றைக்காதல் என்று எதுவுமே இல்லை என்பதுதான். அதை தெளிவாக புரிந்துகொண்டாலே இந்த கள்ளக்காதல் என்கிற திருட்டுத்தனம் பண்ணுகிற தொனி நம் மூளையில் இருந்து மறைந்து விடும்.

“கலீக் ஒருத்தனை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவனோடதான் காபி குடிக்க போறேன் தினமும். செம்ம சார்மிங்கான பையன்” என்று மனைவி சொன்னால் அதை ஒரு Crush ஷாக மட்டுமாவது ஏற்றுக்கொண்டு கிண்டலடிக்கும் மனநிலை எத்தனை ஆண்களுக்கு உண்டு இங்கே ?

“பேஸ்புக்ல ஒரு பொண்ணு. செம்ம இன்டெலெக்ச்சுவல். அப்படி எழுதுறா. அவகிட்ட பேசினா நேரம் போறதே தெரியல” என்று கணவன் சொல்வதை எத்தனை மனைவிகள் அனர்த்தமாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

நண்பர்களுக்கு சமூக ஊடகங்களில் லவ் யூ, ஹக் யூ சொல்லும் பெண்கள் அவர்களின் கணவர்களின் பெண் தோழிகளுக்கும் இந்த உரிமையை வழங்குவார்களா என்பதை ஒவ்வொருமுறையும் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் தோழனை கட்டிப்பிடிக்கும் எந்தப்பெண்ணும் தன்னுடைய கணவனுக்கு இருக்கும் பெண் தோழிகள் பற்றி ஒருநாளும் சமூக ஊடகங்களில் Quote கூட செய்வதில்லை என்பது என்னளவில் ஆச்சர்யம்.

அதேதான் ஆண்களுக்கும். மாதவிடாய் பற்றி பெண்ணுரிமை பற்றி பெண்ணுடல் பற்றி பொங்கி எழும் ஆண்கள், எப்போதாவது அவனுடைய (மனைவி வேண்டாம். அது என்ன எப்போதும் குடும்பத்தை இழுப்பது என்ற கேள்விகளுக்காக தவிர்த்துவிட்டு ) பெண் தோழிக்காவது அந்த வெளியை அளிப்பானா என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். குறைந்தபட்சம் சமையலில் இருந்தாவது விடுதலை அளிப்பானா என்றும்.

இதெல்லாம் நடவாத ஒன்றொன்றும் இல்லை. கணவனுக்குத் தெரிந்தே காதலனுடன் சல்லாபிக்கிற (இந்த வார்த்தை எவ்ளோ அசிங்கமா இருக்கு. இதுக்கு ‘படுக்கும்’ என்கிற அப்பட்டமான வார்த்தையே அழகா இருக்கும் போல) பெண்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

கிராமத்தில் என் வீடருகில் உள்ள அத்தைக்கு, எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் இருந்தே ஒரு EMA இருக்கிறது. மதியமானால் அந்த வீட்டு மாமா வெளியில் சென்று விடுவார். EMA வரும் நேரம் அது.

அத்தையின் பையனுக்கு இப்போது பனிரெண்டு வயதாகிறது. அவன் யாருடைய மகன்… அவன் யார் முகத்தைக் கொண்டு வளருகிறான் என்கிற விவாதங்கள் இன்றும் உண்டு. இனியும் இருக்கும். ஆனால் அதைப்பற்றி அந்த அத்தை ஒருநாளும் கவலைப்பட்டுக்கொண்டதில்லை.

இது ஒன்றுதானா என்றால் இல்லை. அது ஒரு பெரும் தொடர்கதை போலானது. முடிவேயில்லாத ஒன்றைப்போல அயர்ச்சியானதும் கூட. ஆனாலும் அதிலும் வாழ்கையை கொண்டாடுபவர்கள் இருக்கிறார்கள்தான். EMA-க்கள் பேச்சு நிகழும் நேரங்களிலெல்லாம் uneasy ஆகிய நண்பனொருவன் வீட்டிலும் “வந்து செல்கின்ற” ஒருவர் இருந்தார். மதிய உணவும், ஊஞ்சல் தூக்கமுமாக நிகழ்ந்து கொண்டிருந்த அந்த வருகையை, அம்மாவின் தோழமையாக அவன் மிக நேர்மையாக ஏற்றுக்கொண்டான். அவனது அப்பாவும்.

அப்பாக்களுக்கான சுதந்திரம் என்பது அம்மாக்களைப் போல எடுத்துக்காட்டுகளுடன் எழுத வேண்டியதில்லை. இதில் எந்த நெருடலும் யாருக்கும் தேவையில்லை என்பதுதான் என் வரையிலான அடிப்படை புரிதல். அது காதல். அப்படித்தான் இருக்கும்.

அவமானப்படுத்தும். அச்சுறுத்தும். மூச்சு முட்டும். சிறைக்கதவுகளைக்கூட காட்டிச்செல்லும். திருட்டுத்தனமென்று ஊர் சொல்லும். கள்ளக்காதல் முத்திரை குத்தும். ஆனாலும் அதையும் தாண்டி நிலைக்கும். அது காதல். அப்படித்தான் இருக்கும்.

பிரிந்து சென்று புது வாழ்வு தொடங்கலாமே என்ற கேள்விகளும் குழப்பங்களையே ஏற்படுத்துகிறது எனக்கு. எதற்குப் பிரிய வேண்டும். உடனிருப்பவனை/பவளை வெறுத்தால்தான் இன்னொருவன்/ வள் மீது காதல் வருமா என்ன ?

வாழ்க்கையில் ஸ்பெஷல் என்ற ஒற்றை உறவு எதுவுமே கிடையாது. நெருங்கிய உறவுகள் அத்தனையுமே ஸ்பெஷல்தான். ஒவ்வொரு விதத்தில். அது கணவனாகவும், காதலனாகவும், நண்பனாகவும், சகோதரனாகவும், ஆணாகவும் அப்படியே மனைவியாக, காதலியாக, தோழியாக, சகோதரியாக, ஒவ்வொன்றும் ஸ்பெஷல்தான்.

இவை எதற்குள்ளும் வராத ஸ்பெஷல்களும் நம் வாழ்க்கையில் இருக்கும்தான்.

இவனுடன் / இவளுடன் காபி குடிப்பது செம்ம ஸ்பெஷல். இவனுடன்/ளுடன் ஷாப்பிங் செல்வது, இவனுடன்/ளுடன் ஹோட்டல் செல்வது, இவனுடன்/ளுடன் பீச் செல்வது என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவர் ஸ்பெஷலாக தோன்றினால் அதில் எந்தவொரு குற்ற உணர்ச்சியும் கொள்ளத்தேவையில்லை.

வாழ்கை அப்படிதான். உறவுச்சிக்கல்களும் அப்படித்தான். அதை அதன் போக்கிலேயே வாழ்வதற்கு கொஞ்சம் நிதானமும் கொஞ்சம் அன்பும் நிறைய காதலும் இருந்தால் போதும்.
தொடரும்…

14 Comments

 1. அக்கா, எப்டி இவ்ளோ அழகா மனசுல இருக்கறத எழுதியிருக்கீங்க. முதல் பாராவைப் படித்தால் ஏதோ புஷ்பா தங்கதுரைகதையைப் படிக்கப் போறா மாதிரி அறிமுகம் கொடுத்துட்டு, நம்மோட 2000 வருட கற்பிதங்களையெல்லாம் மேசை மேல இருக்கிற தூசியைத் தட்டற மாதிரி தொடச்சி எடுத்துட்டீங்க. கள்ளக் காதல், EMA, மாமா எல்லாம் வேண்டாம். பெண்ணோ, ஆணோ சக உயிர், ஆனா சுவிட்ச் போட்டா மாதிரி கல்யாணம்னு ஒரு ஒரு பேரைச் சொன்னவுடனே, எதிர் பால்ல இருக்கற அந்த சக உயிரின் எல்லாக் குணங்களையும் நிராகரிச்சு நட்புங்கற விஷயத்தையே குழி தோண்டி புதைக்கணும்னு நினைக்கிற சமூக மதிப்பீடுகளுக்கு இந்த எழுத்து அவசியம். கள்ளக்காதல் ங்கற வார்த்தை மேல முதல் முறையா நல்ல மதிப்பீடு வந்திருக்கு. நன்றிங்க்கா, தொடர்ந்து எழுதுங்க.

 2. தெளிவான,வலுவான அலசல். உண்மை இப்படியானது என ஞாபகப்படுத்தும் கட்டுரை. வாழ்த்துக்கள்.

 3. APU & APA க்கள் பெருகுவதை நீங்கள் இந்த அடிப்படையில்தான் புரிந்துகொள்ளவேண்டும். என்னது விவரிக்கவும்

 4. அருமையான கட்டுரை.. யதார்த்தத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்
  காதல் ஓன்று தான் அதை பார்க்கும் கண்களை பொறுத்து தான் அது நல்லதாகவும் கெட்டதாகவும் சித்தரிக்கப்படுகிறது. நன்றி!

 5. மிக யதார்த்தமான, நேர்மையான, வெளிப்படையான சுதந்திரத்திற்கான அணுகல்.

 6. இந்த வார்த்தை எவ்ளோ அசிங்கமா இருக்கு. இதுக்கு ‘படுக்கும்’ என்கிற அப்பட்டமான வார்த்தையே அழகா இருக்கும் போல//

  ;-))))) Semma

 7. கலாபக்காதல் படம் ரொம்ப ரசிச்சு பார்த்தேன் இறுதியில் வரும் ஹைகூ ” காதலில் ஏது கள்ளக்காதல்”. Love is love. காதல் என்ன கத்தரிக்காயா ரகம் பிரிக்க. படிக்காத கிராமத்துகாரனுக்கு எப்படி அல்ஜிப்ரா புரிய வைக்க முடியாதோ அதேமாதிரிதான் இன்றைய சராசரி மனிதனுக்கு காதலை புரிய வைப்பதும். நீண்ட நாட்களுக்கு முன் ஒரு மனோதத்துவ மருத்துவர் எனக்கு சொன்னதை இப்போது தோழி சற்று விரிவாக தெளிவாக சொல்லி இருக்கிறார்.

 8. சிறிது நாட்கள் முன்பு காதல்..இருக்கு ..
  அது எப்போதும் காதல் தான்.அதற்கு ஏன் கள்ள என்று ஒட்டவைக்கிறீகள் என்று கேட்டேன்..
  சரியான வாக்குவாதம் வலுத்து நிறுத்திக்கொண்டோம் அவ்வுரையாடலை..

 9. கலாபக்காதலன் படம் பார்த்தேன் இயக்குனரின் பார்வையில் காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்ற வேற்றுமையில்லை.
  காதல் காதல்தான்.என முடித்திருப்பார்.
  எல்லா ஆண் பெண்களுக்கும் பள்ளிப்பருவம் கல்லூரி எனா தாண்டி காதலை கடந்தே வாந்திருப்போம்.
  பின் திருமணமான பின் மனைவியல்லாது வேறொரு காதால் பிறக்கிறது வளர்கிறது.
  மாட்டிக்கொண்டால் அவமானம் போலிஸ்.
  தற்கொலை,பத்திரிக்கை. தொலைக்காட்சி என கள்ளக்காதலன் கைது என்ற செய்தி கொட்டெழுத்துக்களில் வரும்.
  தாங்கள் சொல்வது தற்க ரீதியாக புரியும் மனநிம்மதி கொடுத்தாலும்.
  கலாச்சாரம்.பண்பிடு என்றா போர்வை அவிழப்படவில்ல ஆனால் உங்களின் சுதந்திரமான கருத்துக்கு சல்யூட்.
  ஒரு பெண்ணாய் தாங்கள் கையாண்ட விதம் மனரீதியான உண்மை.
  ஆனால் செயால் பாட்டில் கள்ளத்தனம் பயம்,சமுதாய நிராகரிப்பு.தள்ளிவைத்தல்
  டைவர்ஸ். என எங்கோ போய் விடும் அபாயத்திற்கு பயந்தே ஆண்கள் அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது.
  திருமணமாகி ஆயிரம் ஆசைகளும் நிராசையான ஒருவனும்.
  திருமணமான நிராசையில் ஒரு பெண்ணும் காதலித்து கொண்டும்.
  உறவுகள் வைத்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள் என்ன இன்றளவும் பிரச்சனையாகவில்லை.

 10. ‘காதல்’ மீதான… அப்பதம் தொடர்பான ஓர் நல்ல?! அலசல் சகோதரி. மனித வாழ்க்கை அவனுக்கு கற்பிக்கபடும்.. இல்லை திணிக்கப்படும் ச(சு?)மூக விழுமியங்களை பொருத்தே அமைகிறது. தன்னிறக்கத்தை தாண்டி ஒரு super ego எல்லோரையும் கண்கொத்தி பாம்பாய் கொத்தி இயக்குகிறது.நல்ல மற்றும் கள்ள என்பதற்கான நெறி அளவீடு குடும்பம், பொருளாதாரம்,வாசிப்பு, வளரும் சூழல் இதனை பொருத்து அறியப்படுகிற்து. எத்திக்கல் லிவ்விங் அப்படித்தான் இருக்கும்… அவர்களுக்காக அல்லாமல்… மாறாக அடுத்த தலைமுறைகளான வாரிசுகளுக்காக…

 11. There can’t be a better article on EMA. நம் சமூகம் பேச மறுக்கும் பல உண்மைகளை போட்டு பொளேர் பொளேர் என பொளந்து கட்டியிருக்கிறீர்கள். இதை நம் மக்கள் எந்த கோணத்தில் நோக்குவார்கள் என்பதில் இருக்கிறது இதன் impact. சரியான புரிதல் இல்லாவிட்டால் குழப்பிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.

 12. //கணவனுக்குத் தெரிந்தே காதலனுடன் படுக்குற//
  கூட்டி குடுக்குறவன் என்ற வார்த்தையால் கொல்லப் படுவான் தானே.

Leave a Reply

Your email address will not be published.


*