நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் தினகரன்

இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட டிடிவி தினகரன் இன்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

அதிமுக கட்சி இரண்டு அணியாக பிரிந்திருப்பதால் அக்கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல்  ஆணையம்  முடக்கி வைத்துள்ளது. இரட்டை இலை சின்னம்  யாருக்கு சொந்தம் என்பதில்  இரு அணியினரும் உரிய ஆவணங்களை வரும்  ஜீலை மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர்  டி.டி.வி.தினகரன் 50 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க முயன்றது இடைத்தரகர் சுகேஷ் சந்திராவை கைது செய்ததும் தெரியவந்தது. சுகேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 10 கோடி ரூபாய் வரையில் பணபரிமாற்றம் நடைபெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து  தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி காவல்துறையினர் அளித்த சம்மனை ஏற்று  தினகரன் கடந்த சனிக்கிழமை டெல்லி காவல்துறையினரிடம் ஆஜரானார். அவரிடம் டெல்லி காவல்துறையினர் 4 நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றது உறுதியானதால் நேற்று நள்ளிரவு டெல்லி காவல்துறையினரால் கைது செய்யபட்டார்.  கைதான டி.டி.வி தினகரன் இன்று பிற்பகல் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். அப்போது, தினகரன் சார்பில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது  வழக்கறிஞர்  சம்பத் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*