முழு அடைப்பு வெற்றி: எதிர்ப்பை திசை திருப்பிய மத்திய அரசு!

தேசிய வங்கிகளில் உள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து நேற்று தமிழக அளவில் முழு அடைப்பு பிரமாண்ட வெற்றி பெற்றது.
திமுக தலைமையில் இந்த முழு அடைப்பு போராட்டம்தான் நேற்றைய ஊடங்களின் செய்திகளை நிறைத்திருந்தது. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட இந்த முழு அடைப்பு போராட்டம். மத்திய அரசுக்கு மிகப்பெரிய எதிர்ப்பாக பார்க்கப்பட்டது.
2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களுக்கு எதிரான பல அதிரடி மசோதாக்களையும், திட்டங்களையும் செயல் படுத்தியது. ஆதார் அட்டை, ஜி.எஸ்.டி மசோதா, நீட் தேர்வு என அடுக்கிக் கொண்டே போகலாம். கடந்த நவம்பரில் பணமதிப்பிழப்பு செய்தது மொத்த இந்திய மக்களையும் ஏ.டி.ஏம் வாசலில் கொண்டு வந்து நிறுத்தி தெருத் தெருவாக அலைய விட்டது. ஆனாலும் மோடி வெற்றி மேல் வெற்றியை குவித்து வருகிறார்.
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் மோடிக்கு கடிவாளம் போடும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. இடது சாரிகளோ சைலண்ட் மோடுக்குள் போய் விட்டார்கள். பண மதிப்பிழப்பு உள்ளிட்ட எந்த ஒரு நடவடிக்கைக்கு எதிராகவும் ஒரு சின்ன சலனம் கூட இல்லாத நிலையில் விவசாயிகளுக்காக தமிழகம் மத்திய அரசுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்தது.
அதுவும் பிரதான எதிர்க்கட்சியான திமுக ஒருங்கிணைப்பில் அது நடந்து முடிந்த விதம் பாஜக தலைவர்களை எரிச்சலுக்குள்ளாக்கியிருக்கிறது.
அதனால் நேற்று நள்ளிரவோடு அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனையை வேறு பக்கம் திருப்பும் விதமாக தினகரனை கைது செய்து அந்தச் செய்தியை முன்னரங்கிற்கு கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக எதிர்ப்புணர்வு இருந்ததை மறக்கடித்து தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி விட்டது என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*