தினகரனுக்கு தொடர்புடைய ஹவாலா ஏஜெண்ட் கைது!

தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் 10 கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்ய உதவி செய்த ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரது நண்பர் மல்லிகார்ஜீனாவையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர். இடைத் தரகர் சுகேஷ் சந்திராவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் பண பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினகரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. அதனையடுத்து தினகரனையும், மல்லிகார்ஜீனாவையும் சென்னையில் வைத்து விசாரிக்க நேற்று காவல்துறையினர் சென்னைக்கு அழைத்து வந்தனர். தினகரனின் வீட்டில் வைத்து அவரிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரது மனைவியான அனுராதாவிடமும் டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். சென்னையில் வைத்து இன்று விசாரணை மேற்கொள்ளப்படவிருக்கிறது. சென்னையில் விசாரணை முடிந்த பிறகு தினகரனையும், மல்லிகார்ஜீனாவையும் பெங்களூர்,கொச்சி ஆகிய நகரங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறது.

இந்நிலையில், தினகரனுக்கு தொடர்புடைய ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் என்பவர் தாய்லாந்திலிருந்து இந்தியா வந்தபோது டெல்லி விமான நிலையத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். டிடிவி தினகரன் 10 கோடி ரூபாய் பணத்தை கொச்சி வழியாக டெல்லிக்கு நரேஷ் மூலம் அனுப்பியதாகவும், நரேஷிடம் இந்த பணத்தை வாங்கி சுகேஷ் சந்திரா தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. நரேஷிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் நரேஷிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் இன்னும் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நரேஷீடன் மேலும் ஒரு ஹவாலா ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. ஹவாலா ஏஜெண்ட்டுகள் கைது செய்யப்பட்டிருப்பதால் இவ்வழக்கில் மேலும் பல திருப்பங்கள் வரும் எனவும் கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*