தினகரன் மனைவியிடமும் விசாரணை!

இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைதான தினகரனிடம் சென்னையில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது, மேலும் அவரது மனைவியிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

தலைமை தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். பின்னர் அவரை டெல்லி திஸ் ஹஸாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்தனர். அவருடன் கைது செய்யப்பட்ட அவரது  நண்பர் மல்லிகார்ஜுனாவையும் காவல்துறையினர் 5 நாள் காவலில் எடுத்துள்ளனர்.  அவர்கள் இருவரிடமும் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தி கூடுதல் ஆதாரங்களை கைப்பற்றுவதுடன், இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக உள்ளனர்..

இதற்காக தினகரனை டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர், பலத்த பாதுகாப்புடன் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அவரது நண்பர் மல்லிகார்ஜீனாவை தினகரன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர். டெல்லி காவல் துணை ஆணையர் சஞ்சய் ஷெராவத் தமையில் 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது. தினகரனின் மனைவி அனுராதாவிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தமிழ்நாடு மற்றும் டெல்லியில் முக்கிய புள்ளிகளும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் விசாரணை முடித்த பின் தினகரனையும், மல்லிகார்ஜீனாவையும் பெங்களூர் அழைத்து சென்று விசாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள் இதையடுத்து, தினகரனை மேலும் சில இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். டி.டி.வி.தினகரன் வீடு மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவின் வீட்டில் சோதனை நடத்தவும் டெல்லி காவல்துறையினர் உரிய அனுமதி பெற்றுள்ளனர். அதன்படி சோதனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*