திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மொத்தம் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

திமுக கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதன் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. கூட்டத்தில் திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் 65 மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது. பொதுமக்களிடம் அதிமுக அரசின் செயல்படாத நிலையை எடுத்துரைப்பது. மக்களிடம் திமுகவுக்கு ஆதரவு திரட்டுவது உட்பட பல்வேறு ஆலோசனைகள் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கூட்டத்தில், தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை உடனடியாக போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்காக திமுக நடத்திய கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தீர்மானம், சட்டப்பேரவையில் வைர விழா கொண்டாடும் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிப்பது,மத்திய அரசு கொண்டு வரும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போன்ற 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், கீழ்மட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அதிமுக இரு அணிகளின் மீதும் அதிருப்தியில் இருக்கும் தொண்டர்களை திமுக பக்கம் இழுப்பது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*