தினகரனை மீண்டும் இன்று டெல்லிக்கு அழைத்து செல்கிறார்கள் காவல்துறையினர்!

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான  தினகரனை இன்று மீண்டும் டெல்லிக்கு அழைத்து செல்கின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் கைதான தினகரனை அடுத்தக்கட்ட விசாரணைக்காக நேற்று முன்தினம் டெல்லி காவல்துறையினர் சென்னை அழைத்து வந்தனர். அவருடன் அவரது நண்பரான மல்லிகார்ஜீனாவையும் அழைத்து வந்திருந்தனர். தினகரனிடமும் அவரது மனைவி அனுராதாவிடமும் தினகரனின் வீட்டில் வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னை ஆதம்பாக்கத்தில் நேற்று காலை மன்னார்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரி மோகன் என்பவருக்கு     சம்மன் அளித்தனர்.  நேற்று இரவு பாரிமுனை மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் டெல்லி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதுவரை சென்னையில் இவ்வழக்கு தொடர்பாக 3 பேருக்கு சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. தினகரனுக்கு நெருக்கமான வழக்கறிஞர் மூர்த்தி என்பவருக்கும் சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. அவரிடம் இன்று விசாரணை நடக்கவிருக்கிறது. டெல்லி காவல்துறையினரின் சோதனை இன்றும் தொடரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதனால் இவ்வழக்கில் தமிழகத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இன்று இரவு 7.40 மணியளவில் தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை மீண்டும் டெல்லிக்கு அழைத்து செல்ல காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் டெல்லியில் கைதான ஹவாலா ஏஜெண்ட் நரேஷிடம் விசாரணை நடந்து வருகிறது. தினகரன் தாக்கல் செய்திருக்கும் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் திங்கள் கிழமை நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*