உதவி இயக்குநர்கள் பற்றி ஒரு ஸ்நாப் ஷாட்

உதவி இயக்குனர்கள் : உதவி என்பது பலனை எதிர்பார்த்து செய்வது அல்ல. அதற்கேற்றவாறு எதையுமே  எதிர்பார்க்காமல் ஒரு திரைப்படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை இயக்குனருக்கு உதவி மட்டுமே செய்து கொண்டிருப்பது தான் ஒரு உதவி இயக்குனரின் வேலையாக அன்றிலிருந்து இன்று வரை இருந்து வருகிறது. இன்றைய அளவில் ஒரு சிலரைத் தவிர்த்து பெரும்பாலான உதவி இயக்குனர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. பல நாட்கள் பசியிலும் வறுமையிலும். அது எப்படி என நீங்களும் பாருங்கள். 
 
தமிழகத்தில் ஆரம்ப கால சினிமாவைப் பொறுத்தவரை கதை, திரைக்கதை, வசனம் எழுதுவது, பின் அப்படத்தை இயக்குவது, ஒளிப்பதிவு செய்வது, படத்தொகுப்பு செய்வது, பாடல் எழுதுவது, சண்டை மாஸ்டராவது, நடன இயக்குனராவது, கலை இயக்குனராவது என சினிமாவினைச் சேர்ந்த எந்தவொரு பிரிவில் நுழைய வேண்டுமென்றாலும் முதலில் அசிஸ்டெண்டாக ஒருவரிடம் சேர்ந்து அவர் மூலமாக அத்தொழிலை கற்றப்படியே வேலை செய்ய வேண்டும். மேலும் எப்படியாவது அவர்களுக்கான வாய்ப்பு தாமதமாக அல்லது விரைவில் ஒரு சிலருக்கும் என எப்படியும் கிடைக்கும்.
 
ஆரம்ப காலத்தில் சினிமா கற்க தனியாக பள்ளி, கல்லூரிகள் இல்லை. எனவே நேரடியாக ஒருவரிடம் வேலை செய்தவாறே உதவியாளர்களாக இருந்து கற்றுவந்தனர். நாளடைவில் தலைமுறைகளுக்கிடையேயான மாறுபாடுகள் நிகழ சினிமாவிலுள்ள ஒவ்வொரு அங்கங்களும் ஓரளவு தனித்தனியாக பிரிக்கப்பட்டு  அதற்கேற்ப வகுப்புகள் கொண்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல பிரைவேட் இன்ஸ்டிட்யூட்கள் என நிறைய சினிமா சார்ந்த பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பணம் அதிகம் வசூலிப்பவையாக உள்ளன. காரணம் சினிமா என்பது இங்கு கலையாக பார்க்கப் படுவது மாறி , பெரும் புகழையும் லாபத்தையும் ஈட்டக்கூடிய ஒரு தொழிலாக பார்க்கப்பட்டு வருகிறது. 
 
தற்போதைய காலகட்டத்தில் இயக்குனராவதற்கு முதலில் உதவியாளர்களாக பணிபுரிய வேண்டுமென்ற ஒரு அவசியமும் கிடையாது. நேராடியாகவே சினிமாவில் நுழைந்து விடலாம். சினிமா சார்ந்து கேட்டு படித்து அதனைச் சார்ந்த முழு அறிவு கொண்ட நல்ல குழு   இருந்தால் போதும். அல்லது சாதாரண அடிப்படை கேமரா மொபைலில் ஆரம்பித்து எதில் வேண்டுமானாலும் குறும்படம் இயக்கலாம். அல்லது நமக்கு நாமே ப்ரொடியூஸ் செய்யுமளவுக்கு நம்மிடம் பணம் இருந்தால் போதும். இப்படி பல வழிகள் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்கள் ஒரு செலவுமின்றி ஒரு நல்ல படைப்பை ப்ரமோட் செய்வதாகவும் இருந்துவருகின்ற இந்த காலத்திலும் உதவி இயக்குனர்கள் பலரது நிலை மட்டும் இன்னும் மாறாததாகவே உள்ளது.
 
லட்சங்களும் கோடிகளுமின்றி  எந்தவொரு தமிழ் சினிமாவும் உருவாவதில்லை. அப்படிப்பட்ட படத்தின் ஆதியிலிருந்து, அதாவது கதை விவாதத்திலிருந்து சூட்டிங் முடிந்து படம் ரிலீசாகும் வரை அதற்கான வேலையை செய்பவர்கள் இயக்குனரும் அவரது உதவியாளர்களும் மட்டுமே. மற்ற கலைஞர்களெல்லாம் தத்தம் வேலைகளை முடித்துக் கொடுத்து கிளம்பிவிட படத்தின் முழு பொறுப்பையும் அதனை இயக்கம் செய்யும் குழு மட்டுமே தாங்கி நிற்கும்.  மேலும் படத்தின் வெற்றி தொல்வியும் பெரும்பாலும் அப்படத்தின் இயக்குநரையே சார்ந்ததாகவும் அமையும்.  
 
அத்தகைய இயக்குநரானவர், தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்லி முதலில் படத்திற்கான தயாரிப்பாளரைப் பிடிப்பார். பின்னர் அந்த தயாரிப்பாளரிடம் படத்திற்கான முன்வேலைகள், படப்பிடிப்பு, பின்வேலைகள் என அனைத்து வேலைகளையும் அந்த வேலையை செய்யக்கூடிய டெக்னீஷியன்கள் (அதாவது இயக்குனர், நடிகர்கள், கேமராமேன்  முதற்கொண்டு அனைத்து டெக்னீஷியன்கள்)  மற்றும் அவர்கள் சம்பளம் என அனைத்தையும் குறிப்பிட்டு படத்திற்கான பட்ஜெட்டை இயக்குனர் ஒப்படைக்க வேண்டும். பின் அவர்களுக்குள் சமாதானமாகி ஒரு பட்ஜெட் முடிவு செய்து படத்திற்கான தொகை ஒதுக்கப்பட்டு அனைவருக்கும் அட்வான்ஸ் கொடுத்து முன்வேலைகள் தொடங்கப்படும்.
 
இதில் கேமரா மேனை எடுத்துக் கொண்டால் அவரது அசிஸ்டெண்டுக்கான சம்பளத்தையும் சேர்த்துத் தான் குறிப்பிட்டு வாங்கிக் கொள்வார் மற்றும் தன் உதவியாளருக்கு சம்பளத்தை கொடுக்கவும் செய்வார். இப்படித்தான் அனைத்து பிரிவுகளிலும் அவர்களது உதவியாளருக்குத் தேவையான ஊதியங்கள் பெறப்பட்டு விடும். அனால் உதவி இயக்குனருக்கான ஊதியம் மட்டும் பெரும்பாலும் இதில் இருக்காது. இயக்குனர்கள் கேட்டாலும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே உதவி இயக்குனர்களுக்கு சம்பளம்  தரப்படாது என பலர் கூறிவிடுவார்கள். அல்லது அவர்களின் சம்பளத்தையும் இயக்குநர்களே பெற்றுக் கொள்வார்கள். 
 
கதை விவாதம் தொடங்கி சூட்டிங் போகும்வரை உதவி இயக்குனர்கள் அலுவகத்திலேயே தான் இருக்க வேண்டும். பல நாட்கள் அங்கு தங்கி விடக்கூடும். அதற்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் மூன்று வேளை சோறு மட்டுமே. அதையும் தாண்டி சிலர் தினம் நூறு ரூபாய் கொடுப்பார்கள். மேலும் சூட்டிங் செல்லும் சமயங்களில் அதிகபட்சமாக 300ரூபாய் பேட்டா கிடைக்கும். அதற்குப் பிறகு அவர்களுக்கு ஒரு பைசா கிடைக்காது. மறுபடியும் சோற்றுக்கும் செலவுக்கும் நண்பர்களிடம் எதிர்பார்த்து நிற்க வேண்டிவரும். 
 
இதுபற்றிய ஆய்வில் பெரிய உலகப் புகழ் பெற்ற நிறுவனங்கள் கூட தான் தயாரிக்கும் தமிழ்ப் படத்தில் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தான் சம்பளம் தருவதாகவும், அதையும் சரியாகாத் தருவதில்லை எனவும் தெரிய வந்தது. மேலும் சமீபத்தில் தமிழில் சிறுபட்ஜெட்டில் உருவாகி வெளியாகி பலமடங்கு லாபம் பார்த்த ஒரு திரைப்படத்தில் வேலை செய்த உதவி இயக்குநர்களின் ஊதியம் மாதம் 3000 ரூபாய். ஆனால் படம் வெளியாகி பெரிய ஹிட்டடித்ததற்கு முக்கிய காரணமானவர்கள் இவர்கள். இவர்களுக்கு இதில் கிடைப்பது பெயர்மட்டுமே.  அதுவும் அவ்வளவாக மக்களைச் சென்றடையாது.   
 
அவர்களின் வாழ்வாதாரத்திற்கு கூட தான் செய்யும் தொழில் உதவவில்லை எனில் ஒருவனால் எப்படி அதில் இயங்க முடியும். எத்தனை நாட்கள்தான் வீட்டை நம்பியும் நண்பர்களை நம்பியும் வாழ முடியும்? இதனையெல்லாம் கேட்டால் கஷ்டப்பட்டால் தான் முன்னேறமுடியும் என்ற முதுமொழியை உதிர்ப்பார்கள். வாய்ப்பிற்காக கஷ்டப் படலாம் தவறில்லை. வாய்ப்பு கிடைத்தும் அந்த வேலையைச் செய்யமுடியாத படி அந்தத் துறையைச் சேர்ந்தவர்களே  இவர்களை இத்தகைய இக்கட்டான சூழலுக்கு ஆளாக்கி வைக்கும்போது, இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டும் என்கிற அவசியமேயில்லை.  
 
படத்திற்கு மொத்தம் ஆகின்ற செலவில் 1% கூட இருக்காது ஒரு உதவி இயக்குனருக்கான சம்பளம். ஆனால் அதில் மிச்சம் பிடித்துத்தான் தயாரிப்பாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்வார்கள். வசதியானவர்கள் சொந்தமாக படம் செய்துகொள்வார்கள். சினிமா சார்ந்து படித்தவர்கள் அங்கே ஒரு குழுவாக இணைந்து படம் பண்ணத் துவங்குவார்கள். ஆனால் பொருளாதாரத்தில் பின்னடைவாக உள்ள பல இளைஞர்கள் இப்படியாக  இயக்குனர்களிடம் சேர்ந்து தான் சினிமா கற்கமுடியும். சினிமா மீதான ஈர்ப்பு சோறு காசை கூட மறக்கடித்து அவர்களிடத்தில் இவர்களை அடிமையாக்கி விடும். இப்படி பல இளைஞர்கள் இருப்பதால் தான் காசெல்லாம் தரமுடியாது. உனக்கு வேண்டுமென்றால் இரு இல்லையென்றால் உனக்குத்தான் இழப்பு எனும் எண்ணத்தில் உதவி இயக்குநர்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். 
 
இதையும் தாண்டி சரியான அங்கீகாரம் கொடுத்து உதவி இயக்குனர்களை நல்லபடியாக கவனிப்பது ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே. சமீபமாக வந்துள்ள சிறுவயது இயக்குனர்கள் பெரும்பாலானோர் தனது உதவியாளர்களை நல்லபடியாக கவனிக்கின்றனர். நான் உதவியாளனாக இருந்த போது பட்ட கஷ்டத்தை தன் உதவியாளர்கள் அடைந்து விடக்கூடாது என்று எண்ணி சிலர் செயல்பட்டு வருகின்றனர். இப்படியானவர்களால் தான் இந்த அளவிலான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 
 
இத்தகைய நிலை சீக்கிரம் ஒழிய வேண்டுமெனில் அனைத்து உதவி இயக்குனர்களும் சம்பளம் பெரும்படியான சூழலை உண்டாக்க வேண்டும். எப்போதும் போட்டிகள் நிறைந்ததாக இருக்கும் இந்தத்துறையில் ஒரு பைசா கூட வேண்டாம் வேலை பார்க்கத் தயார் என பல்லாயிரக் கணக்கான உதவி இயக்குனர்கள் எப்பொழுதும் இருந்துகொண்டிருப்பதே  இந்த பிரச்சனைக்கு காரணம். இந்த நிலை முற்றிலும் மாற இன்னும் பத்து ஆண்டுகளாவது ஆகும். 
– மனோ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*