கொடநாடு கொலை 3 பேர் கைது!

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை, தொடர்பாக கேரள மாநிலத்தில் மேலும் 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது கொடநாட்டில் உள்ள எஸ்டேட் பங்களா. அவர் உயிரோடு இருந்தபோது ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்று ஓய்வெடுப்பார். அவர் உயிரோடு இருந்தபோது அங்கு பலத்த பாதுகாப்பு இருந்துவந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அங்கிருந்த பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. அதனால் கொடநாடு எஸ்டேட்டுக்கு ஓம்பகதூர் மற்றும் கிருஷ்ண பகதூர் ஆகியோர் காவலில் ஈடுபட்டு வந்தனர். 10-ஆம் எண் நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓம்பகதூர் கடந்த 24-ஆம் தேதி மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து முரளிரம்பா தலைமையிலான தனிப்படை நடத்திய தீவிர விசாரணையில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் முக்கிய குற்றவாளியென தெரியவந்தது. அவர் கடந்த 28-ஆம் தேதி நள்ளிரவில் சாலை விபத்தில் மரணமடைந்தார். வழக்குக்கு தொடர்புடைய சயான் என்ற மற்றொரு குற்றவாளியும் சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அதனைத் தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட 9 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.  சந்தோஷ் சாமி, திபு, சதிசன் மற்றும் உதயகுமார் ஆகிய 4 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்த 4 பேருக்கும் 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மலப்புரம் அருகே மேலும் 2 பேர் கைது நேற்று கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொடநாடு கொலை தொடர்பாக இன்று கேரள மாநிலத்தில் விதித் ஜாய், ஜெம்சீர் அலி, அமீஷ் அனூப் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையின் முடிவில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 200 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*