தினகரனுக்கு திகார்!

இரட்டை இலை சின்னத்தை திரும்ப பெற அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் 50 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க முயன்றது இடைத்தரகர் சுகேஷ் சந்திராவை கடந்த 16-ஆம் தேதி டெல்லி காவல்துறையினர்  கைது செய்ததும் தெரியவந்தது. சுகேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தினகரன் 50 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் வரையில் பணபரிமாற்றம் நடைபெற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து  தினகரன் மீது 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி காவல்துறையினர் அளித்த சம்மனை ஏற்று  தினகரன் கடந்த 22-ஆம் தேதி டெல்லி காவல்துறையினரிடம் ஆஜரானார். அவரிடம் டெல்லி காவல்துறையினர் 4 நாட்கள் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றது உறுதியானதால் 25-ஆம் தேதி நள்ளிரவு டெல்லி காவல்துறையினரால் கைது செய்யபட்டார். அவருடன் அவரது நண்பர் மல்லிகார்ஜீனாவும் கைது செய்யப்பட்டார். கைதான டி.டி.வி தினகரன் கடந்த 26-ஆம் தேதி டெல்லி திஸ் ஹாசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தினகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி காவல்துறை அனுமதி கேட்டிருந்தது. அதனையடுத்து 5 நாட்கள் தினகரனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

இதனைத் தொடர்ந்து தினகரன் அடுத்தக்கட்ட விசாரணைக்காக கடந்த 27-ஆம் தேதி சென்னை அழைத்து வரப்பட்டார். சென்னையில் அவரது வீட்டில் வைத்து அவரிடமும் அவரது மனைவி அனுராதாவிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அவரது நண்பர் மல்லிகார்ஜீனை தினகரன் வீட்டுக்கு அடுத்த வீட்டில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு சென்னை ஆதம்பாக்கத்தில் மோகன் என்ற ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரியிடமும் விசாரணை நடத்தி அவருக்கு சம்மன் வழங்கினர். பாரிமுனை, பெரம்பூர் போன்ற பகுதிகளிலும் தீவிர சோதனையில் டெல்லி காவல்துறையினர் ஈடுபட்டனர். இவ்வழக்கு தொடர்பாக தமிழகத்தில் 3 பேரிடம் சம்மன் வழங்கப்பட்டது. சென்னையில் விசாரணையை முடித்து கொண்டு கடந்த 29-ஆம் தேதி தினகரனை அழைத்து கொண்டு மீண்டும் டெல்லி சென்றது காவல்துறை.

இந்நிலையில் 5 நாட்கள் விசாரணை முடிந்த பிறகு டெல்லி காவல்துறையினரால் திஸ் ஹாசாரே நீதிமன்றத்தில் தினகரன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து தினகரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். மே 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள தினகரன் திகார் சிறையில் அடைக்கப்படவிருக்கிறார். அவரது நண்பர் மல்லிகார்ஜீனாவையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மே 15-க்கு முன் தேவைப்பட்டால் காவல்துறையினர் தினகரனிடம் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் விசாரணை செய்யலாம் எனவும் உத்தரவிட்டிருக்கிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*