பன்னீர் செல்வம் அணியினர் ஆலோசனை!

பன்னீர் செல்வம் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியினர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக பழனிசாமி தரப்பினர் கூறியதும் அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் உருவாகியது. இதற்காக இரு அணி சார்பிலும் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. பன்னீர் செல்வம் அணியினர் சசிகலா குடும்பத்தை ஒட்டுமொத்தமாக நீக்கினால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். ஆனால் பழனிசாமி தரப்பு அதற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலாவின் பேனர்களை மட்டும் அகற்றினார்கள். பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் இரு அணியினரும் ஊடக கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். பன்னீர் செல்வம் விரைவில் முதலமைச்சர் ஆவார் என்று செம்மலை கூறினார். இதற்கு விளக்கமளிக்கும்படி நிதியமைச்சர் ஜெயக்குமார் கேட்டார். செம்மலை கூறியது சேலம் மாவட்ட நிர்வாகிகளின் கருத்து என பொன்னையன் கூறினார். இதற்கு ஜெயக்குமார், பன்னீர் அணியினர் முரண்பட்டு பேசிவருகிறார்கள். அவைகளனைத்தும் முடிந்தால்தான் பேச்சுவார்த்தை தொடங்குமென கூறினார். இதனால் இரு அணிகளும் இணைவதற்கான சூழல் தாமதமாகும் என கூறப்பட்டது. ஆனால் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பழினசாமி இரு அணிகளும் இணைவதற்கு பன்னீர் செல்வம் அணியினர் முட்டுக்கட்டை போடுகின்றனர்.  122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தங்களுக்கே உள்ளதென்றும் அதனால் மற்றவர் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என்றும் கூறினார். மேலும் இரு அணிகளும் இணையாவிட்டாலும் பரவாயில்லை என பேசினார்.இதனால் அதிமுகவின் இரு அணிகளும் இணையாது என்பது ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில், பழனிசாமி கருத்தினால் அதிர்ச்சியடைந்த பன்னீர் செல்வம் அணி இன்று பன்னீர் செல்வத்தின் வீட்டினில் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். இக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும். தங்களது பலத்தை எப்படி நிரூபிப்பது எனவும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, மாஃபா பாண்டியராஜன், கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை பழனிசாமி அணியுடன் இணையப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக பன்னீர் செல்வம்அறிவிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*