மறுபடியும் இந்தி திணிப்பு!

பிராந்திய மற்றும் டப்பிங் படங்களுக்கு இந்தியில் சப்டைட்டில் அவசியம் என தேசிய திரைப்பட வளர்ச்சிக்கு கழகம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தியை கட்டாய பாடமாக மத்திய அரசாங்கம் திணித்திருந்த நிலையில் தற்பொழுது பிராந்திய மற்றும் டப்பிங் படங்களுக்கு இந்தியில் சப்டைட்டில் அவசியமென தெரிவித்துள்ளது. 
 
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் (Anti-Hindi imposition agitations) என்பது இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக்கும் மற்றும் இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராகத் தமிழக மக்களால், பெரும்பாலும் ஜனநாயக, அற வழிகளில் நடத்தப்பட்ட போராட்டமாகும்.
 
1937ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின் இராஜகோபாலாச்சாரி தலைமையில் அமைந்த அரசு, பள்ளிகளில் இந்தி படிப்பதைக் கட்டாயமாக்கியது. அதை எதிர்த்து, எதிர்க்கட்சியாக விளங்கிய நீதிக்கட்சியும் பெரியார் ஈ. வெ. இராமசாமியும் மூன்று ஆண்டுகள் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர். அரசின் காவல் நடவடிக்கைகளில் இரண்டு போராட்டக்காரர்கள் இறந்தனர்; பெண்கள், சிறுவர்கள் உட்பட 1198 பேர் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு அரசு 1939ஆம் ஆண்டு பதவி விலகியதை ஒட்டி சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் ‘எர்ஸ்கின் பிரபு’ பிப்ரவரி 1940ஆம் ஆண்டில் இந்தக் கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.
 
இந்தியா விடுதலை பெற்ற பிறகு அரசியலமைப்பு சட்டமன்றத்தில் புதிய இந்தியக் குடியரசில் நிலவ வேண்டிய அலுவல்மொழி குறித்து நீண்ட விவாதம் நடந்தது. பல உரையாடல்களுக்குப் பின்னர் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி அரசுப்பணி மொழியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆங்கிலம் இணை அலுவல்மொழியாக விளங்கும் என்றும் அதன் பின்னர் இந்தி மொழி மட்டுமே அரசுப்பணிகளில் பயன்படுத்தப்படும் என்றும் ஏற்றுக்கொள்ளபட்டது. புதிய இந்திய அரசியலமைப்பு சனவரி 26, 1950 அன்று நடப்பிற்கு வந்தது. ஆகவே அரசியலமைப்பில் ஏற்றுக்கொண்டபடி 1965 ஆண்டிலிருந்து இந்தி மட்டுமே அரசுப்பணிமொழியாக விளங்க அரசு மேற்கோண்ட முயற்சிகள் இந்தி பேசாத மாநிலங்களில் எதிர்ப்பலைகளை உண்டாக்கின. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த எதிர்ப்பில் முன்னணியில் இருந்தது. இந்தக் கவலைகளை நீக்கும் விதமாக அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963ஆம் ஆண்டில் கொண்டு வந்த அரசுப்பணிமொழி சட்டத்தில் 1965ஆம் ஆண்டிற்குப் பிறகும் ஆங்கிலம் அரசுமொழியாக விளங்க வழி செய்தார். ஆயினும் அச்சட்டத்தின் உள்ளடக்கம் தி.மு.க விற்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அவரது வாய்மொழி வாக்குறுதிகள் பிந்தைய அரசுகளால் ஏற்கப்படாமல் போகலாம் என்ற அச்சத்தினை வெளியிட்டனர்.
 
26 சனவரி,1965 நாள் நெருங்கிவந்த காலத்தில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுக்கத் துவங்கியது. அவ்வாண்டு குடியரசு நாளை கருப்புதினமாகக் கொண்டாட தி. மு. க அழைப்பு விடுத்திருந்தது. போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பெரிதும் ஈடுபட்டனர். மதுரையில் 25 சனவரியன்று அவர்களுக்கும் காங்கிரசு கட்சியினர் சிலருக்கும் இடையே எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவிய இக்கலவரம் காவலர்களால் அடக்க முடியாத அளவில் அடுத்த இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்தது. பரந்த அளவில் வன்முறை, தீவைப்பு எனப் போராட்டக்காரர்களும் தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினரும் மோதினர். இக்கலவரங்களில் இரு காவல்துறையினர் உட்பட 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்ந்தது.
 
1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு தமிழகத்தில் மீண்டும் காங்கிரசால் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. 1967ஆம் ஆண்டு அமைந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசு, அரசுப்பணிமொழிச் சட்டத்தில் என்றென்றும் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளும் அரசுமொழிகளாக விளங்கும் வகையில் திருத்தம் கொண்டுவந்தது.
 
தற்பொழுது உள்ள மத்திய அரசாங்கம் மீண்டும் மறைமுக இந்தி திணிப்பை  தேசியம் முழுதும் நுழைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் கல்வித் துறை, அடுத்ததாக கலைத்துறை என அப்படியெல்லாம் இந்தியை எளிதாகவும் பரவலாகவும் மக்களிடம் திணிக்க முடியுமோ அவ்வகையில் அழகாக திணித்து வருகிறது. இப்படியே சென்று கொண்டிருந்தால் எதிர்ப்புப் போராட்டங்கள் மீண்டும் நிச்சயம் தமிழகத்தில் எழும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*